ECONOMYNATIONAL

பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான விண்ணப்பக் கடிதத்தை  மலேசியா ரஷியாவிடம் வழங்கியது

புத்ராஜெயா, ஜூலை 28-  பிரிக்ஸ்   (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) நாடுகளுக்கிடையிலான அமைப்பில் இணைவதற்கான விண்ணப்பக் கடிதத்தை அதன் நடப்புத்  தலைவரான  ரஷ்யாவுக்கு மலேசியா அனுப்பியுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மலேசியாவுக்கு வருகை புரிந்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்வுடன் பிரதமர் அன்வார்  ஸ்ரீ பெர்டானாவில் நடத்திய  கலந்துரையாடலில் முக்கிய அம்சமாக  பிரிக்ஸ் அமைப்பில் சேர்வது தொடர்பான மலேசியாவின் விருப்பம்  இருந்தது என்று பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் அறிவித்தது.

பிரிக்ஸ் அமைப்பில்  சேர்வதற்கான விண்ணப்பக் கடிதத்தை மலேசியா அந்த அமைப்பின் தலைவராக உள்ள  ரஷ்யாவிற்கு மலேசியா அனுப்பியுள்ளது. அதன் உறுப்பு நாடாக அல்லது விவேகப் பங்காளியாக சேர்வதற்கான விருப்பத்தையும் அது வெளிப்படுத்தியது என்று அந்த அறிக்கை கூறியது.

பிரிக்ஸ் அமைப்பில் சேரும் மலேசியாவின் விருப்பத்தை பிரதமர் அன்வார் கடந்த  ஜூன் 18ஆம் தேதி பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம்  தெரியப்படுத்தினார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவை உள்ளடக்கிய இந்த  பிரிக்ஸ் அமைப்பு  வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுக்கான  ஒத்துழைப்பு தளமாக விளங்கும் நோக்கில் கடந்த  2009ஆம் ஆண்டு  நிறுவப்பட்டது.  தென்னாப்பிரிக்கா கடந்த 2010ஆம் ஆண்டும் அதன் பின்னர்   எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசு ஆகிய நாடுகளும் அந்த அமைப்பில் இணைந்தன.

இந்த பிரிக்ஸ் அமைப்பு இப்போது உலகப் பொருளாதாரத்தில் நான்கில் ஒரு பங்கையும் உலக வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கையும் கொண்டுள்ளது. உலக மக்கள்தொகையில் சுமார் 40 விழுக்காட்டை இந்த அமைப்பு  பிரதிநிதிக்கிறது.

முன்னதாக, ஸ்ரீ பெர்டானா வளாகத்தில் காலை 10 மணிக்கு லாவ்ரோவ் மற்றும் தூதுக்குழுவினரை  வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் வரவேற்றார்.

மேலும் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் மற்றும் உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காடிர் ஜம்ப்ரி ஆகியோரும்  இதில் கலந்து கொண்டனர்.

ஏறக்குறைய ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் மலேசியா-ரஷ்யா உறவுகளை வலுப்படுத்துவது,  வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு,  உயர்கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான முன்னெடுப்புகள் குறித்து அன்வார் மற்றும் லாவ்ரோவ் விவாதித்தனர்.


Pengarang :