NATIONAL

போலீஸ் சோதனையிலிருந்து தப்ப முயன்றவர் ஆற்றில் மூழ்கி மரணம்- கிரீக்கில் சம்பவம்

ஈப்போ, ஜூலை 29 – போலீஸ் சோதனையிலிருந்து தப்பும் முயற்சியாக
ஆற்றில் குதித்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் நீரில் மூழ்கி மாண்டார்.
இச்சம்பவம் இம்மாதம் 25ஆம் தேதி கிரீக் அருகே உள்ள பத்து 6, பெர்சியா
எனுமிடத்திலுள்ள டுரியான் தோட்டம் ஒன்றில் நிகழ்ந்தது.

பேராக் ஆற்றின் கிரீக், கம்போங் ஜாகோர் பகுதியில் ஆடவர் ஒருவரின்
உடல் மிதப்பது தொடர்பில் நேற்று முன்தினம் மாலை 5.40 மணியளவில்
தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் கிரீக் மாவட்ட போலீஸ் தலைவர்
சூப்ரிண்டெண்டன் ஜூல்கிப்ளி மாமுட் கூறினார்.

மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் தடுப்புப்
பிரிவினர் சம்பந்தப்பட்டப் பகுதியில் ஓப்ஸ் தாப்பில் நடவடிக்கையை
மேற்கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக சந்தேகிக்கப்படுகிறது
என்று அவர் தெரிவித்தார்.

அந்த சோதனை நடவடிக்கையின் போது அப்பகுதியில் இருந்த அந்த நபர்
போலீசாரிடமிருந்து தப்பும் நோக்கில் ஆற்றை நோக்கி ஓடியுள்ளார். அதன்
பிறகு அவ்வாடவர் அங்கு காணப்படவில்லை. சம்பந்தப்பட்ட நபரை கண்டு
பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டிருந்த நிலையில் ஆற்றில்
அவரது சடலம் மிதப்பதை கம்போங் ஜபோர் குடியிருப்பாளர்கள் கண்டு
எங்களுக்குத் தகவல் கொடுத்தனர் என்றார் அவர்.

தீயணைப்புத் துறை மற்றும் பொது தற்காப்பு படையின் உதவியுடன்
காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு 7.40 மணியளவில்
அவ்வாடவரின் சடலத்தை மீட்டு சவப்பரிசோதனைக்காக கீரிக்
மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர் என அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.

அவ்வாடவரின் உடல் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டதால்
அவரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை எனக் கூறிய அவர், குற்றச்செயலுடன் தொடர்பு படுத்தும் அளவுக்கு உடலின் வெளிப்புறத்தில் எந்த காயமும் காணப்படவில்லை என்றார்.


Pengarang :