NATIONAL

வங்காளதேச நெருக்கடி- மலேசிய மாணவர்கள் உள்நாட்டில் கல்வியைத் தொடரலாம்

ஈப்போ, ஜூலை 29 – மாணவர்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்ட
வங்காளதேசத்திலிருந்து தாயகம் அழைத்து வரப்பட்ட மாணவர்கள்
தங்களின் கல்வியைத் தொடர்வதற்கு இரு வாய்ப்புகள் உள்ளன.

பாதிக்கப்பட்ட அந்த மலேசிய மாணவர்கள் உள்நாட்டிலேயே தங்கள்
கல்வியைத் தொடர்வது அல்லது அந்த தெற்காசிய நாட்டில் நிலைமை
சீரடையும் பட்சத்தில் கல்வியைத் தொடர மீண்டும் அங்கு செல்வது
ஆகியவையே அவ்விரு வாய்ப்புகளாகும் என்று உயர்கல்வி அமைச்சர்
டத்தோஸ்ரீ ஜாம்ரி அப்துல் காடீர் கூறினார்.

அம்மாணவர்கள் மீண்டும் வங்காளதேசம் செல்ல விரும்புகிறார்களா
என்பதை அறிந்து கொள்ள அவர்களுடன் அமைச்சு கலந்துரையாடலை
நடத்தும் என்று அவர் சொன்னார்.

நாங்கள் நடப்பு நிலவரங்களை கண்காணிக்கும் அதேவேளையில்
உள்நாட்டில் கல்வியைத் தொடர விரும்புகிறார்களா? இல்லையா? என்பது
தொடர்பில் மாணவர்களின் கருத்தையும் கவனத்தில் கொள்வோம். மேலும்
இவ்விவகாரத்தில் அவர்களின் கல்வித் தகுதி, நிலை மற்றும் அவர்கள்
கற்கும் பாடம் தொடர்பான விஷயங்களும் கருத்தில் கொள்ளப்படும்
என்றார் அவர்.

இருப்பினும், தேவையற்ற மன அழுத்தம் ஏற்படாமலிருப்பதை உறுதி
செய்ய சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு ஆலோசக சேவை வழங்கப்படும்
அல்லது நிலைமையை புரியவைப்பதற்கு ஏதுவாக அதிகாரிகளுடன்
அவர்கள் சந்திப்பு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என அவர்
குறிப்பிட்டார்.

இஸ்லாமிய சிந்தனை மற்றும் நாகரீகம் மீதான அனைத்துலக மாநாட்டை
முன்னிட்டு நடத்தப்பட்ட உயர்கல்வியமைச்சுடனான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு அகற்றப்பட்ட பொதுச் சேவைத் துறைக்கான
கோட்டா ஒதுக்கீட்டு முறையை நீதிமன்றம் மறுபடியும் நிலைநிறுத்தியதை
ஆட்சேபித்து வங்காளதேசத்தில் உள்ள உயர்கல்வி மாணவர்கள் கடந்த
ஜூலை முதல் தேதி தொடங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டங்களில் இதுவரை 130க்கும் அதிகானோர்
உயிரிழந்துள்ளனர்.

இந்த கலவரத்தைத் தொடர்ந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின்
உத்தரவின் பேரில் அந்நாட்டிலிருந்து 80 மாணவர்கள் உள்பட 123
மலேசியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.


Pengarang :