NATIONAL

சிறுமி கடத்தல் – சந்தேகப் பேர்வழி க்கு எதிரான தடுப்புக் காவலை நீட்டிக்க காவல்துறை விண்ணப்பம்

ஜோகூர் பாரு, ஜூலை 29 – இஸ்கந்தார் புத்ரியில் உள்ள பேரங்காடி ஒன்றில் அல்பெர்த்தின் லியே ஜியா ஹுய் என்ற ஆறு வயது சிறுமியைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் 31 வயது ஆடவருக்கு எதிரான தடுப்புக் காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் அதனை நீட்டிக்க காவல் துறையினர் விண்ணப்பிக்கவுள்ளனர்.

சந்தேகப் பேர்வழியிடம் மேலும் விரிவான அளவில் விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக தடுப்புக் காவலை நீடிப்பதற்கான அனுமதி கோரப்படுகிறது என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் எம். குமார் கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தின் பத்தாங் காலியில் உள்ள மலிவு கட்டண ஹோட்டல் ஒன்றில் கடத்தப்பட்ட அச்சிறுமியுடன் அந்த சந்தேகப் பேர்வழி பிடிப்பட்டதாக அவர் சொன்னார்.

சிறுமி கடத்தப்பட்டது தொடர்பான விசாரணைக்காக அந்த சந்தேகப் பேர்வழியை இன்று தொடங்கி வரும் ஆகஸ்டு 5ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான அனுமதி கோரப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜூலை 20ஆம் தேதி அந்த பேரங்காடியின் இகோ கேலரியாவில் அந்த சிறுமி அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டார்.

இந்த கடத்தல் தொடர்பான விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆருடங்களை வெளியிட வேண்டாம் என்று குமார் அறிக்கை ஒன்றில் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.

கடந்த ஜூலை 20ஆம் தேதி இங்குள்ள பேரங்காடி ஒன்றில் காணாமல் போன சிறுமியைக் கண்டு பிடிப்பதில் உதவும்படி பொது மக்களை இஸ்கந்தார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எம். குமரேசன் பொது மக்களை முன்னதாக கேட்டுக் கொண்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் 28 முதல் 55 வயது வரையிலான இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் போலீஸ் ஜாமீனில் கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.


Pengarang :