NATIONAL

பாரிஸ் ஒலிம்பிக்-ஜப்பானிய ஜோடியைத் தோற்கடித்து பியர்லி-தினா சாதனை

பாரிஸ், ஜூலை 29 – தேசிய மகளிர் இரட்டையர் பூப்பந்து வீராங்கனைகளான பியர்லி டான்-எம். தினா ஜோடி 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று  உலகின் ஆறாம்  நிலை ஆட்டக்காரர்களான ஜப்பானின்  மயூ மாட்சுமோட்டோ-வகானா நாகஹாரா ஜோடியைத் தோற்கடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

போர்டே டி லா சேப்பல் அரங்கில்  நடைபெற்ற  ஏ பிரிவு ஆட்டத்தில்   2018 மற்றும் 2019ஆம் ஆண்டு உலக சாம்பியனான  அந்த ஜப்பான் ஜோடியை   உலகின் 13வது நிலை விளையாட்டாளர்களான பியர்லி- தினா ஜோடி  முழு ஆற்றலுடன் கூடிய ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18-21, 21-15, 21-16 என்ற செட் கணக்கில் தோற்கடித்தனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற  ஏ பிரிவின் தொடக்க ஆட்டத்தில் சீனாவின் சென் குயிங்-ஜியா யி ஃபேன் அணியிடம்  தோல்வியடைந்த  அந்த மலேசிய ஜோடி   இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முன்னேறும் நம்பிக்கையை புதுப்பித்துள்ளது.

இருப்பினும், கடந்த  2022 பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்த ஜோடிக்கு   மற்றொரு  கடுமையான சவால் காத்திருக்கிறது.  அவர்கள் நாளை  இறுதிக் குழு ஆட்டத்தில் உலகின் ஒன்பதாம் நிலை விளையாட்டாளர்களான இந்தோனேசியாவின் அப்ரியானி ரஹாயு-சித்தி ஃபாடியா சில்வா ராமதாந்தியை எதிர்கொள்கின்றனர்.


Pengarang :