NATIONAL

மைசெல் முயற்சியில்  30 பேர் அடையாளப் பத்திரங்களைப் பெற்றனர்

ஷா ஆலம், ஜூலை 29 – அடையாளப் பத்திரங்கள் இல்லாதவர்களுக்கு
உதவும் நோக்கில் மாநில அரசினால் அமைக்கப்பட்ட மைசெல் பிரிவின் முயற்சியில்  மூவினங்களையும் சேர்ந்த 30 பேர் இன்று அடையாள ஆவணங்களைப் பெற்றனர். அவர்களில் பத்து பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய பதிவுத் துறையால் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  தலைமையில்  இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில்  இன்று நடைபெற்ற நிகழ்வில் அடையாளப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டனர்.

மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் உள்பட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பாப்பாராய்டு,  விண்ணப்பம் செய்தவர்களுக்கு அடையாளப் பத்திரங்கள் கிடைப்பதில் உதவிய  தேசிய பதிவுத் துறை,  குடிநுழைவு  இலாகா உள்ளிட்டத் தரப்பினருக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

அடையாளப் பத்திரங்கள் இல்லாமல் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வந்தவர்களுக்கு மாநில அரசின இந்த உதவி பெரும் நிம்மதியை தந்துள்ளது. இனிமேல் அவர்கள் மற்றவர்களைப் போல்  அடிப்படை உரிமைகளைப் பெற முடியும் என்பதோடு இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவிகளையும் பெற இயலும் என்றார் அவர்.

நீல அடையாளக் கார்டு, பிறப்பு பத்திரம், குடியுரிமை மற்றும் தத்தெடுப்பு
சான்றிதழ் உள்ளிட்ட அடையாள ஆவணங்கள் இல்லாத பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் முழு மூச்சுடன் ஈடுபடும் மைசெல் அமைப்பின் அதிகாரிகளான ரகு மற்றும் திருமதி சாந்தா ஆகியோருக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் சொன்னார்.

அடையாளப் பத்திரங்களைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்ளும் சிலாங்கூர் வாசிகளுக்கு உதவும் நோக்கில் இந்த மைசெல் பிரிவை மாநில அரசு  கடந்த 2008ஆம் ஆண்டில் அமைத்தது.


Pengarang :