SELANGOR

ஏடிஸ் கொசு உற்பத்தியாகும் இடங்களை அழிக்க நடவடிக்கை –  எம்பிபிஜே

ஷா ஆலம், ஜூலை 30: பெட்டாலிங் மாவட்ட சுகாதார அலுவலகத்துடன் இணைந்து ஏடிஸ் கொசு உற்பத்தியாகும் இடங்களை அழிக்க குடியிருப்பாளர்களுடன் கூட்டுப் பணியை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே) மேற்கொண்டது.

டிங்கி நோயின் ஆபத்துகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதுடன், அதிகரித்து வரும் டிங்கி சம்பவங்களை கட்டுப் படுத்தும் நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன என அதன் மேயர் முகமட் ஜாஹ்ரி சமிங்கோன் கூறினார்.

“கம்போங் சுங்கை காயு அரா, அபார்ட்மெண்ட் இண்டா பிஜேயு 10, அபார்ட்மெண்ட் பெலாங்கி டாமன்சாரா பிஜேயு 6, எஸ்எஸ் 5சி, பிளாட் இம்பியன் பைடுரி மற்றும் பிளாட் டேசாரியா பிஜேஎஸ் 5 போன்ற பல இடங்களில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.

“இந்த ஒத்துழைப்பின் மூலம், டிங்கி காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு வழிவகுக்கும் பகுதியை ஒழிக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

“இந்தத் திட்டம் ஒட்டுமொத்த பெட்டாலிங் ஜெயா சமூகத்தையும், குறிப்பாக டிங்கி ‘ஹாட்ஸ்பாட்’ பகுதியில், தூய்மையான சுற்றுச்சூழலை பராமரிப்பதில் ஆக்ககரமான நடவடிக்கைகளை எடுக்க ஊக்குவிப்பதாகும்,” என்று நேற்று எம்பிபிஜே மாதாந்திர கூட்டத்தில் அவர் கூறினார்.

இதற்கிடையில், கடந்த ஜூலை 7 முதல் 13 வரையிலான 28வது தொற்றுநோயியல் வாரத்தில் (ME28) மொத்தம் 4,220 டிங்கி காய்ச்சல் சம்பவங்களுடன் 133 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

“இந்த நிலைமை முந்தைய தொற்றுநோயியல் வாரத்துடன் (27/2024) ஒப்பிடும்போது டிங்கி நோயாளிகளின் எண்ணிக்கை 1 சதவீதம் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. மே மாத இறுதியில் அபார்ட்மெண்ட் பெர்மாய் பிஜேயூ 3இல் ஒரு மரணம் ஏற்பட்டது.

“இந்த ஆண்டு சுபாங் ஜெயா மாநகராட்சியில் 5,543 மற்றும் ஷா ஆலம் மாநகராட்சியில் 3,892 டிங்கி சம்பவங்கள் பதிவாகின” என்று அவர் விளக்கினார்.


Pengarang :