SELANGOR

டிரான்சிட் வாடகை வேன் சேவையை ஆண்டு இறுதி வரை தொடர – மாநில அரசு கோரிக்கை

ஷா ஆலம், ஜூலை 31- ஒரு பயணத்திற்கு இரண்டு வெள்ளி கட்டணத்தில்
டி.ஆர்.டி. எனப்படும் அழைப்பு இடைமாற்று வேன் சேவையை இவ்வாண்டு
இறுதி வரை மேற்கொள்ள அச்சேவையை மேற்கொண்டு வரும்
நிறுவனத்தை மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இச்சேவை இன்றுடன்
முடிவுக்கு வரும் நிலையில் இத்திட்டத்தின் மூலம் மக்கள் தொடர்ந்து
பயனடைவதை உறுதி செய்வதற்காக பொருத்தமான மற்றும் விவேகமான
செயல்முறையை மாநில அரசு ஆராய்ந்து வருகிறது என்று போக்குவரத்து
துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

இந்த முன்னோடித் திட்டம் இன்றுடன் முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து
இந்த டி.ஆர்.டி. வேன் சேவையை தற்போதுள்ள பகுதிகளில் அதே 2.00
வெள்ளிக் கட்டணத்தில் வரும் டிசம்பர் மாதம் வரை மேற்கொள்ள மாநில
அரசு சம்பந்தப்பட்ட நிறுவனத்தை மாநில அரசு ஊக்குவிக்கிறது என்று
அவர் தெரிவித்தார்.

அதே சமயம், இந்த டி.ஆர்.டி. வேன் சேவையை சிலாங்கூர் மாநில மக்கள்
தொடர்ந்து பெறுவதற்கு ஏதுவாக பொருத்தமான மற்றும் விவேகமான
செயல் துறையை மாநில அரசு ஆராய்ந்து வருகிறது என இன்று
வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.

கடந்த எட்டு மாத காலத்தில் இந்த டி.ஆர்.டி. சேவையை வழங்கும்
நிறுவனம் பயணிகள் எண்ணிக்கை மற்றும் அச்சேவையின் பயன்பாடு
தொடர்பான தரவுகளைச் சேகரிப்பதற்காக எட்டு மண்டலங்களில்
சேவையை மேற்கொண்டு வந்தது என அவர் சொன்னார்.

குறுகலான மற்றும் மக்கள் தொகை அடர்த்தியாக உள்ள பகுதிகளில்
ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் சேவைக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டி.ஆர்.டி. சேவையை கடந்த ஜூன் மாதம் வரை 54,000 பேர் பயன்படுத்தியுள்ளனர்.

குடியிருப்பு பகுதிகளுடன் இரயில் மற்றும் பேருந்து நிலையங்களை
இணைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த டி.ஆர்.டி. சேவை
வழங்கப்படுகிறது.


Pengarang :