ANTARABANGSA

ஹமாஸ் தலைவர் படுகொலை  ஒரு மிருகத்தனமான செயல்- மந்திரி புசார் கண்டனம்

ஷா ஆலம், ஆக 1 – ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டது ஜியோனிச ஆட்சியின் ‘மிருகத்தனமான செயல்’ என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வர்ணித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொலை செய்யப்பட்டதை சிலாங்கூர் மாநில அரசு வன்மையாகக் கண்டிக்கிறது.

ஜியோனிச ஆட்சியின் இந்த மிருகத்தனமான செயல் பாலஸ்தீனத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமைகள் மற்றும் அனைத்துலகச் சட்டங்களை அவர்கள் தொடர்ந்து மீறுவதன் அடையாளமாகும்.  மத்திய கிழக்கு மோதலில் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் உயிர்களை இழந்துள்ளனர் என்று  முகநூலில் வெளியிட்டப் பதிவில் அவர் கூறினார்.

இந்த சோக நிகழ்வினால் ஆழ்ந்த துயரில் இருக்கும் பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு அமிருடின் தனது இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.

முன்னதாக,  இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில்  மந்திரி புசார் இந்த அனுதாபச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவரான இஸ்மாயிலின் படுகொலை மிகவும் கொடூரமானது என்பதோடு 40,000 க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி வாங்கிய காஸா போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் நடந்துகொண்டிருக்கும் பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும்  நோக்கிலானது  என்று அவர் கூறினார்.

அதேபோல், வெளியுறவு அமைச்சும் இந்த  படுகொலைக்கு வன்மையான கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த  படுகொலை குறித்து உடனடி மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதோடு குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அது கூறியது.

ஈரானின் தெஹ்ரானில் உள்ள இஸ்மாயில் இல்லத்தை குறிவைத்து நேற்று அதிகாலை இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில்  அவர் நிகழ்விடத்திலேயே கொல்லப்பட்டார்.


Pengarang :