NATIONAL

மித்ரா செயல்திட்ட முன்வரைவில் மூன்று பரிந்துரைகள் முன்வைப்பு

புத்ராஜெயா, ஆக1 – மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவின் (மித்ரா) செயல் திட்ட வரைவில் முன்மொழியப்பட்ட மூன்று பரிந்துரைகளில் இந்திய சமூக விவகாரங்களுக்கான தேசிய மன்ற உருவாக்கமும்  ஒன்றாகும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான இந்த மன்றம்  மித்ராவின் கொள்கைகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து முடிவெடுக்கும்  என்று தேசிய ஒற்றுமைத் துறை துணையமைச்சர் கே.சரஸ்வதி தெரிவித்தார்.

மித்ரா அறக்கட்டளை கணக்கை நிறுவுதல் மற்றும் அந்த அமைப்பின் நிறுவன கட்டமைப்பை மறுசீரமைத்தல் ஆகியவை  அந்த அறிக்கையில் உள்ள மற்ற இரண்டு பரிந்துரைகளாகும் என அவர் கூறினார்.

மித்ரா அறக்கட்டளை கணக்கை உருவாக்குவதானது,  நடப்பாண்டில் செலவழிக்கப்படாத ஒதுக்கீட்டின் மீதியை கணக்கில் சரிசெய்ய அனுமதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார் அவர்.

இதற்கிடையில்,  மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தின் பி40 பிரிவினரின்  பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மிகவும் ஆக்ககரமானச் சேவை வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் மித்ராவின் கீழுள்ள அனைத்து  அமைப்புகளும் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளன என்று அவர்  சொன்னார்.

நேற்று இங்கு  மித்ரா செயல் திட்ட வரைவை  முன்வைக்கும் நிகழ்வில் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

கடந்த மார்ச் 7 முதல் ஜூலை 6 வரையிலான 16 வார கால  அமலாக்க காலத்தில் தேசிய ஒற்றுமைத் துறை  அமைச்சினால்  நியமிக்கப்பட்ட பெமாண்டு அஸோசியேட் சென். பெர்ஹாட்
நிறுவனம் மேற்கொண்ட ஆய்வைத் தொடர்ந்து இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.

முந்தைய மித்ரா திட்டங்களின் அமலாக்கம்  மற்றும் அவை மக்களிடையே ஏற்படுத்திய  தாக்கம் குறித்து ஆரம்பக் கருத்துகளைப் பெறுவதற்காக பொதுமக்களிடம் கேள்வி-பதில் பாணியில்  தரவுகள் மற்றும் தகவல்களை சேகரிப்பதை அடிப்படையாகக் கொண்டு  இந்த  ஆய்வை அந்த ஆலோசக நிறுவனம்  மேற்கொண்டதாக சரஸ்வதி கூறினார்.

இந்த ஆய்வின் மூலம் கிடைத்த  தரவுகள் இந்திய சமூகத்தின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு தேவையான  திட்ட முன்மொழிவுகள் மற்றும் முன்னெடுப்புகளை உள்ளடக்கிய ஒரு செயல் திட்ட அறிக்கையாக வடிவமைக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியை நனவாக்குவதில்  மித்ராவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய நான்கு அடிப்படைக் கூறுகள் அந்த அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் எப்போது செய்யப்படும் என்று கேட்டபோது, ​​  அது தற்போது மித்ராவுக்கு பொறுப்பேற்றுள்ள  பிரதமர் துறையைப்  பொறுத்ததாகும் என்றார் அவர்.


Pengarang :