SELANGOR

நீர் மாசுபாடு தொடர்பான குற்றங்களுக்கு கடந்தாண்டு வெ.10 லட்சம் அபராதம் வசூல்- லுவாஸ் தகவல்

ஷா ஆலம், ஜூலை ஆக 2- மூல நீர் ஆதாரங்கள் மாசுபடுவதற்கு காரணமாக இருந்த குற்றங்களுக்காக கடந்தாண்டு ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் தரப்பினருக்கு சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் (லுவாஸ்) பத்து லட்சம் வெள்ளிக்கும் மேற்பட்ட தொகையை அபராதமாக விதித்துள்ளது.

தங்கள் உறுப்பினர்கள் களத்தில் மேற்கொண்ட தொடர்ச்சியான சோதனை மற்றும் அமலாக்க நடவடிக்கையின் வாயிலாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று லுவாஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஹஸ்ருள்நிஸாம் ஷஹாரி கூறினார்.

இவ்வாண்டில் இதுவரை நாங்கள் 800,000 வெள்ளியை அபராதமாக வசூலித்துள்ளோம். எந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு காணும் என நம்புகிறோம். பிடிபடுவோரில் பெரும்பாலோர் ஏற்கனவே தண்டிக்கப்பட்டவர்களாக அல்லாமல் புதியவர்களாக உள்ளனர்.

உதாரணத்திற்கு ஒரு சில இடங்களுக்கு லுவாஸ் அதிகாரிகள் சோதனைக்குச் செல்லும் போது அங்கு செயலாக்க முறை சிறப்பானதாக இல்லாதது தெரிய வருகிறது. அங்குள்ள நீரை சோதனை செய்யும் போது விதிமீறல் தொடர்பான அம்சங்கள் அம்பலத்திற்கு வருகிறது என அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தொடர்புடைய உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் பழுதடைந்திருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு உடனடியாக குற்றப்பதிவு வெளியிடப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

அபராதத் தொகையைச் செலுத்த மறுத்த ஒரு சம்பவத்தையும் நினைவுகூர்ந்த அவர், சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது அது விசாரணையில் உள்ளது எனக் கூறினார்.


Pengarang :