ANTARABANGSA

இஸ்மாயில் இறுதிச் சடங்கில் மலேசியா சார்பில் உள்துறை துணை அமைச்சர் பங்கேற்கிறார்

புத்ராஜெயா, ஆக 2- கட்டாரி நாட்டின் டோஹாவில் நடைபெறும் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் மலேசிய பேராளர் குழுவுக்கு உள்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சம்சல் அனுவார் நசாரா தலைமையேற்பார்.

சம்சுல் அனுவார் தலைமையிலான இந்தக் குழுவில் செனட்டர் டத்தோஸ்ரீ டாக்டர் முஜாஹிட் யூசுப் மற்றும் உள்துறை அமைச்சின் அதிகாரிகளும் இடம் பெற்றிருப்பர் என்று வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

டோஹாவிலுள்ள இமாம் முகமது இப்னி அப்துல் அல்-வாஹாப் பள்ளிவாசலில்  வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் நடைபெறும் இறுதிச் சடங்கில் மலேசிய பேராளர் குழு பங்கு கொள்ளும்.

ஹனியேவின் நல்லுடல் லுசாய்ல் நகரிலுள்ள இமாம் பெனுபோ மையத்துக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.

மறைந்த ஹனியேவின் குடும்பத்தினர், தலைவர்கள் மற்றும் அனைத்து பாலஸ்தீன மக்களுக்கும்  பிளவுபடாத ஆதரவை  மலேசியா புலப்படுத்துவதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.

கடந்த மாதம் 31ஆம் தேதி விடியற்காலை 2.00 மணியளவில் தெஹ்ரானின் வடபகுதியில் உள்ள வீடொன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் இஸ்மாயில் உயிரிழந்தார்.

ஈரானின் புதிய அதிபர் மாசுட் பெஸேகியானின் பதவியேற்புச் சடங்கில் கலந்து கொள்வதற்காக இஸ்மாயில் ஈரான் சென்றிருந்த போது இந்த தாக்குதல் நிகழ்ந்தது.


Pengarang :