SELANGOR

15 கிலோ போதைப் பொருள் கடத்தியதாக இளைஞர் மீது குற்றச்சாட்டு

சிப்பாங், ஆக  2 – மொத்தம் 15.75 கிலோகிராம் எடையுள்ள  மெத்தாம்பேட்டமைன்  போதைப் பொருளைக் கடத்தியதாக பதின்ம வயது இளைஞர் ஒருவர் மீது   இங்குள்ள  செஷன்ஸ் நீதிமன்றத்தில்  இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிபதி அகமது  புவாட் ஓத்மான் முன்னிலையில்  குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது,  அபாங் டேனி அபாங் அஸ்லான் (வயது 19) என்ற இளைஞர் குற்றச்சாட்டை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக தலையை அசைத்தார். ஆனால் அவரிடம்  வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த ஜூலை 19ஆம் தேதி  இரவு 9.24 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில்   உள்ள 2 ஆம் நிலை போதைப்பொருள் விசாரணைப் பிரிவு அலுவலகத்தில்  போதைப் பொருள் கடத்தியதாக அவர்  குற்றஞ்சாட்டப் பட்டுள்ளார்.

1952 ஆம் ஆண்டு அபாயகர  போதைப்பொருள் சட்டத்தின்  39பி (1) (ஏ) பிரிவின்  கீழ் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.

இப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால்  மரண தண்டனை,  மரண தண்டனை விதிக்கப்படாத பட்சத்தில் ஆயுள் தண்டனை மற்றும்  குறைந்தபட்சம் 15 பிரம்படி வழங்கப்படும்.

இந்த வழக்கின் மறு விசாரணையை நீதிமன்றம் வரும்  நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

அரசுத் தரப்பில் அரசு  துணை வழக்கறிஞர் நூர் சப்ரினா ஜுபைரி வழக்கை நடத்தும் வேளையகல்  குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர் டேரன் ஈ ஆஜரானார்.


Pengarang :