NATIONAL

காயமடைந்த பாலஸ்தீனர்களை சிகிச்சைக்காக மலேசியா கொண்டு வர அரசாங்கம் தயார்

கோலாலம்பூர், ஆக 5- காஸா போரில் காயமடைந்தவர்களில் ஒரு   பகுதியினரை குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களை சிகிச்சைக்காக  மலேசியா கொண்டு வருவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது.
இந்த பரிந்துரையை தாங்கள் எகிப்திய அதிபர் அப்டில்-ஃபாத்தா அல்-சிசி  மற்றும் இதர இஸ்லாமிய நாட்டுத் தலைவர்களிடம்  முன்வைத்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்   கூறினார்.
நாம் சிறிதளவு உதவி வழங்க விரும்புகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு  அங்கேயே அல்லது இங்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்கவிருக்கிறோம்.
சமரசமின்றி இந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம் என அவர்  குறிப்பிட்டார்.
இந்நோக்கத்திற்காக அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யும். இதன் தொடர்பில்  நான் பேங்க் நெகாரா கவர்னரிடம் (டத்தோ சேஷக் அப்துல் ரஷிட் காபூர்)  பேச்சு நடத்தினேன். ஒத்துழைப்பு வழங்கியதற்காக அவருக்கு நன்றி  தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.
இங்குள்ள ஜாலில், அக்ஸியாத்தா அரேனா அரங்கில் நேற்றிரவு   நடைபெற்ற பாலஸ்தீன விடுதலைப்   பேரணியில் உரையாற்றிய போது  அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாஹிட் ஹமிடி,  அமைச்சர்கள், அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது ஜூக்கி   அலி மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பாலஸ்தீன மக்கள் படும் இன்னல்களை பல்வேறு சமூக ஊடகத் தளங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்ளும் முயற்சியைத் தொடரும்படி   மலேசியர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
பாலஸ்தீன விவகாரம் குறித்து தினசரி பேசுங்கள். பாலஸ்தீனத்திலுள்ள  நமது சகாக்களின் சுமையைக் குறைப்பதற்கு உதவி வழங்குவதை  ஒருபோதும் நிறுத்தாதீர்கள் என அவர் வலியுறுத்தினார்.
பாலஸ்தீன மக்களின் நலன் காக்க முழுமையாகவும் தொடர்ச்சியாகவும்  போராடிய நாடு மலேசியா என்ற பெயர் உலக வரலாற்றில் இடம் பெற வேண்டும் என்பது எனது விருப்பமாகும் என்றார்

Pengarang :