NATIONAL

படுகொலைக்கு முன் இஸ்மாயில் ஹனியே விடுத்த கடைசி வேண்டுகோளைக் கேட்டு கண்கலங்கினார் பிரதமர்

கோலாலம்பூர், ஆக 5- கடந்த புதன் கிழமை இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்படுவதற்கு முன்னர் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே தமக்கு விடுத்த கடைசி வேண்டுகோளைக் கேட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கண்கலங்கினார்.
பாலஸ்தீன மக்களின் எதிர்கால நலனுக்காக இஸ்ரேலுக்கு எதிரானப் போராட்டத்தை அன்வார் தொடர வேண்டும் என்று மறைந்த இஸ்மாயில் ஹனியே விரும்பியதாக மக்களவைச் சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் கூறினார்.
ஈரானின் புதிய அதிபரின் பதவியேற்பு நிகழ்வில் மலேசியா சார்பில் கலந்து கொள்ளும்படி பிரதமர் அன்வார் என்னைக் கேட்டுக் கொண்டார். அந்த நிகழ்வில் இஸ்மாயில் ஹனியேவின் இருக்கைக்கு பின் வரிசையில் நான் அமர்ந்திருந்தேன்.
நிகழ்ச்சி முடிந்தவுடன் இஸ்மாயில் பின்புறம் திரும்பி என்னை நோக்கினார். அன்வார் பற்றி நலம் விசாரித்த அவர், இந்த புனிதப் போராட்டத்தை அன்வார் தொடர வேண்டும் எனக் கூறியதோடு இந்த தகவலை அன்வாரிடம் சேர்த்துவிடுங்கள் என என்னைக் கேட்டுக் கொண்டார் என்று ஜோஹாரி குறிப்பிட்டார்.
இங்குள்ள புக்கிட் ஜாலில் அக்ஸியாத்தா அரேனா அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற பாலஸ்தீன விடுதலை பேரணியில் சுமார் 15,000 பேர் முன்னிலையில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு சொன்னார்.
ஈரானிய அதிபர் மசூட் பெஷஸ்கியானின் பதவியேற்புச் சடங்கில் மலேசியா சார்பில் ஜோஹாரி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் இஸ்மாயில் ஹனியே உள்ளிட்டத் தலைவர்களும் பங்கேற்றனர்.
இதனிடையே, இந்நிகழ்வில் உரையாற்றிய மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம், பாலஸ்தீன விவகாரம் இஸ்லாமிய சமயம் சார்ந்தது மட்டுமல்ல. மாறாக அது மனுக்குலம் சார்ந்த விஷயம் ஆகும் எனக் குறிப்பிட்டார்.
பாலஸ்தீனம் விடுதலை அடைந்து 76 ஆண்டுகள் ஆன போதிலும் அது இன்னும் அந்த சுதந்திரத்தின் பலனை அடையாததால் முழுமையான சுதந்திரத்தை அது இன்னும் பெறவில்லை என்று அவர் சொன்னார்.

Pengarang :