NATIONAL

பிங்காஸ் திட்டம்-1,200 விண்ணப்பங்களை உலு கிளாங் தொகுதி பெற்றது

ஷா ஆலம், ஆக.13 – சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்திற்கு
(பிங்காஸ்) இதுவரை 1,200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை உலு கிளாங்
தொகுதி பெற்றுள்ளது.

இத்திட்டத்திற்காக தங்கள் தொகுதிக்கு வழங்கப்பட்ட 480 ஒதுக்கீடுகளை
நிரப்புவதற்காக அந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடவடிக்கையில்
தாங்கள் ஈடுபட்டு வருவதாகத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஜூவாய்ரியா
ஜூல்கிப்ளி கூறினார்.

கடந்த வாரம் வரை அந்த ஒதுக்கீட்டில் பாதி பூர்த்தி செய்யப்பட்ட
வேளையில் எஞ்சியவற்றை நிரப்புவதற்கு ஏதுவாக விண்ணப்பங்கள்
பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று அவர் சொன்னார்.

இந்த திட்டத்தில் உண்மையாகவே தகுதி உள்ளவர்கள் மட்டுமே
பங்கேற்பதை உறுதி செய்ய அனைத்து விண்ணப்பங்களும் கடுமையான
பிரிசீலனைக்கு உட்படுத்தப்படுகின்றன என்று சிலாங்கூர்கினிக்கு அளித்த
பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

எனினும், பிங்காஸ் தவிர்த்து வசதி குறைந்தவர்களை இலக்காகக்
கொண்ட உணவுக் கூடை வழங்குவது உள்ளிட்ட இதர உதவித்
திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர்
சொன்னார்.

மாநில அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுச் சேர்ப்பதற்கான
நடவடிக்கையில தொகுதி அலுவலகம் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு
வருவதாகவும் அவர் கூறினார்.

ஸ்கிம் ஆயர் டாருள் ஏசான் எனப்படும் இலவச நீர் விநியோகத் திட்டம்
மற்றும் இல்திஸாம் சேஹாட் சிலாங்கூர் ((ஐ.எஸ்.எஸ்.) எனப்படும்
இலவச மருத்துவப் பரிசோதனை போன்ற திட்டங்களுக்குப் பொது மக்கள்
மத்தியில் குறைவான வரவேற்பு கிடைத்து வருவதை தாங்கள்
உணர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிங்காஸ் திட்டத்தின் வாயிலாக மேலும் அதிகமானோர் பயன் பெறுவதை
உறுதி செய்ய அத்திட்டத்தில் பங்கேற்பதற்கான வருமான வரம்பு 3,000
வெள்ளியிலிருந்து 5,000 வெள்ளியாக உயர்த்தப்படுவதாக சமூக நலத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபார் ஷாரி கடந்த ஜூலை 5ஆம்
தேதி கூறியிருந்தார்.

மாதம் 300 வெள்ளி வீதம் ஈராண்டுகளுக்கு உதவித் தொகை வழங்க வகை
செய்யும் இந்த திட்டத்திற்கு எதிர்வரும் ஆகஸ்டு 15ஆம் தேதிக்குள் செலங்கா
செயலி வாயிலாக அல்லது www.bingkasselangor.com என்ற அகப்பக்கம்
வாயிலாக விண்ணப்பம் செய்யும்படி பொது மக்களை அவர் கேட்டுக்
கொண்டார்.


Pengarang :