NATIONAL

அலோர்காஜாவில் வெள்ளம் – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 237 பேராகக் குறைந்தது

மலாக்கா, ஆக. 13 – இன்று காலை 7.00 மணி நிலவரப்படி அலோர் காஜா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 61 குடும்பங்களைச் சேர்ந்த 237 பேராக குறைந்துள்ளது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை 121 குடும்பங்களைச் சேர்ந்த 407 பேராக இருந்தது.

பாதிக்கப்பட்ட அனைவரும் இம்மாவட்டத்தில் உள்ள ஏழு துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைச் செயலகத்தின் அதிகாரி ஓய்வு பெற்ற லெப்டிணன்ட் கர்னல் கமாருள்ஷியா முஸ்லிம் கூறினார்.

பாலாய் ராயா பாயா லெபார் துயர் துடைப்பு மையத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேரும் பாலாய் ராயா ஆயர் பாபாஸ் மையத்தில் மூன்று குடும்பங்களை சேர்ந்த மூவரும் மலாக்கா இஸ்லாமிய சமயப் பள்ளியில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர கோல லிங்கி ஜெபெருன் சட்டமன்ற ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் உள்ள வெள்ள நிவாரண மையத்தில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 105 பேரும் ஆயர் லிமாவ் ஜெபெருன் மையத்தில்  12 குடும்பங்களைச் சேர்ந்த 44 பேரும் பாலாய் ராயா ஸ்ரீ ஜெராமில் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரும் அடைக்கலம் நாடியுள்ளனர் என்று அவர் சொன்னார்.

இரு தினங்களுக்கு முன்னர் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் சுமார் 20 கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று காலை வானிலை தெளிவாகக் காணப்பட்டதோடு சாலைகளும் போக்குவரத்துக்கு மூடப்படவில்லை.


Pengarang :