NATIONAL

சுக்மா போட்டியில் தங்கம் வென்றால் வெ.10,000 வெகுமதி – சிலாங்கூர் அறிவிப்பு

கூச்சிங், ஆக. 14 – சரவா மாநிலத்தில் நடைபெறும்  2024 மலேசிய விளையாட்டுப் போட்டிகளில் (சுக்மா) மாநில அணிக்கு பெருமை சேர்க்கும் விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் பதக்கம் வெல்லும் ஒவ்வொருவருக்கும் ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

சுக்மா தங்கப் பதக்கம் வெல்லும் ஒவ்வொருவருக்கும்  அதிகப்பட்சமாக 10,000 வெள்ளியை வெகுமதியாக வழங்கும் இரண்டு மாநிலங்களில்  ஒன்றாக சிலாங்கூர் விளங்குகிறது. 10,000  வெள்ளி வெகுமதி வழங்கும் மற்றொரு மாநிலம் ஜொகூர் ஆகும்.

தங்கப் பதக்க  வெற்றியாளர்ளுக்கு பகாங் 6,000  வெள்ளியை வழங்குகிறது. அதே சமயம் பெர்லிஸ், பேராக், கூட்டரசு பிரதேசம், மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்கள் தனிநபர் போட்டிகளில்  தங்கப் பதக்கம் வெல்வோருக்கு 5,000 வெள்ளியை வெகுமதியாக வழங்குவதாக உறுதியளித்துள்ளன.

சிலாங்கூரில் ஐந்து நபர்களுக்குக் குறைவான குழு போட்டிகளில் தங்கம் வெல்லும் பட்சத்தில்  ஒவ்வொரு விளையாட்டாளருக்கும் தலா 5,000  வெள்ளியும் ஐந்துக்கும் அதிகமானோரைக் கொண்ட  குழு போட்டிகளில் தங்கம் வென்றால்  ஒரு நபருக்கு 3,000 வெள்ளியும்  வழங்கப்படும். இது கடந்த  2022ஆம் ஆண்டு சுக்மா போட்டியில் வழங்கப்பட்ட தொகையைக் காட்டிலும்  மூன்று மடங்கு அதிகமாகும்.

பகாங்கைப் பொறுத்தவரை, தங்கப் பதக்கம் வெல்லும் போட்டியாளர்களுக்கு  6,000 வெள்ளி  ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.  முன்பு  இந்த தொகை 4,000 வெள்ளியாக இருந்தது.

தேக்வாண்டோ, தடகளம், பளுதூக்குதல் மற்றும் படகோட்டம் ஆகிய போட்டிகளில் 10 தங்கப் பதக்கங்களை வெல்வதை இலக்காகக் கொண்ட பெர்லிஸ் மாநிலம், தனிநபர் போட்டிகளில்  தங்கப் பதக்கம் வெல்வோருக்கு  5,000 வெள்ளியும்  வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களுக்கு முறையே  3,700 மற்றும் 2,400 வெள்ளியும்  வழங்குகிறது.

பேராக் அணியைப் பொறுத்தவரை, தங்கப் பதக்கம் வெல்வோருக்கு  5,000 வெள்ளியும் வெள்ளிப தக்கம் வெல்லும் வீரர்களுக்கு 3,000 வெள்ளியும்   வெண்கலப் பதக்கம் வெல்லும்  விளையாட்டாளராகளுக்கு  1,000 வெள்ளியும் வழங்கப்படும். அதே சமயம் குழுப் பிரிவில் தங்கப் பதக்கத்திற்கு 2,500 வெள்ளியும் வெள்ளிப் பதக்கத்திற்கு 1,500 வெள்ளியும்  வெண்கலப் பதக்கத்திற்கு 500 வெள்ளியும் வழங்கப்படும்.

இதற்கிடையே, கூட்டரசுப் பிரதேசத்தில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு (தனிநபர் மற்றும் குழு) 5,000 வெள்ளி வழங்கப்படும் வேளையில்  வெள்ளி பதக்கத்திற்கு 2,000 வெள்ளியும் வெண்கலத்திற்கு 1,000 வெள்ளியும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

சுக்மா 2024  போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் இம்மாதம் 24 வரை நடைபெறும், இதில் 37 விளையாட்டுகளை உள்ளடக்கிய 488 அங்கங்கள்  இடம்பெறும்.


Pengarang :