NATIONAL

குற்றம் இழைக்கும் போலீஸ்காரர்கள் விஷயத்தில் சமரசத்திற்கு இடமில்லை- ஐ.ஜி.பி. திட்டவட்டம்

கோலாலம்பூர், ஆக. 14 – முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடும்
மற்றும் விதிகளை மீறும் போலீஸ்காரர்கள் விஷயத்தில் அரச மலேசிய
போலீஸ் படையின் தலைமைத்துவம் ஒருபோதும் விட்டுக் கொடுக்கும்
போக்கை கடைபிடிக்காது என்று தேசிய போலீஸ் படைத் தலைவர்
டான்ஸ்ரீ ரசாஸருடின் ஹூசேன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தவறான நடத்தை மற்றும் விதிமீறல் தொடர்பில் காவல் துறை
உறுப்பினர்களுக்கு எதிராக இவ்வாண்டு ஜூன் மாதம் வரை
திறக்கப்பட்டுள்ள விசாரணை அறிக்கைகளின் எண்ணிக்கை கடந்தாண்டு
முழுவதும் பதிவானதை விட அதிகமாகும் என்று அவர் சொன்னார்.

இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை காவல் துறையினருக்கு எதிராக
1,760 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு முழுவதும்
1,665 விசாரணை அறிக்கைள் மட்டுமே திறக்கப்பட்டன என்று அவர்
குறிப்பிட்டார்.

அரச மலேசிய போலீஸ் படையின் உயர் நெறி மற்றும் தரப் பின்பற்றல்
துறையின் (ஜிப்ஸ்) மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வுக்கு தலைமையேற்று
உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

காவல் துறையில் நிகழும் முறைகேடானச் செயல்களைக் கையாள்வதில்
தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கக் கூடிய
அணுகுமுறையை ஆராயும்படி ஜிப்ஸ் துறையை அவர் கேட்டுக்
கொண்டார்.

அரச மலேசிய போலீஸ் படையில் உயர்நெறி தொடர்பான
விவகாரங்களில் கவனம் செலுத்தும் போது நிலைமை மேலும்
மோசமடைவதை தடுப்பதற்கு ஏதுவாக நெறி மீறல் பிரச்சனைகளுக்குத்
தீர்வு காண்பதற்கான ஆக்ககரமான வழிகளை அத்துறை ஆராய வேண்டும்
என அவர் வலியுறுத்தினார்.

முறைகேடுகள் முன்கூட்டியே கண்டறியப்படும் பட்சத்தில் தண்டனைக்குப்
பதிலாக தவறுகளைத் திருத்துவதற்கான நடவடிக்கைளை எடுக்க முடியும்
என்றார் அவர்.

இவ்வாண்டு மார்ச் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் அரச
மலேசிய போலீஸ் படை உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மற்றும் பணி
நெறிமுறை நிர்ணயிக்கப்பட்ட விதிகளுக்கு முரணாக உள்ளதை காவல்
துறையின் மேலாண்மை மீதான நஸிரான் சுயேட்சை ஆணையத்தின்
அறிக்கை காட்டுகிறது என்று அவர் சொன்னார்.


Pengarang :