NATIONAL

அனைத்து கல்வி நிலைகளிலும் தேசிய விழுமியங்களை இணைக்க வேண்டும்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – எதிர்காலத் தலைவர்களாக மாணவர்கள் தலைமுறையை திறமையான மற்றும் நெறிமுறையான முறையில் உருவாக்க, கல்வியின் அனைத்து நிலைகளிலும் தேசிய விழுமியங்களை பாடத்திட்டத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம் தேசிய கல்வி முறையில் மாற்றம் தொடங்க வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார். .

ஒருமைப்பாடு, சமத்துவம் மற்றும் சமூகப் பொறுப்பு போன்ற பண்புகள் நன்னெறி பாடமாக மட்டும் போதிக்கப் படாமல் அனைத்து கல்வி துறைகளிலும் ஒரு அடித்தளமாகவும் கற்பிக்கப்பட வேண்டும் என்றார்.

“ஒரு முழுமையான கற்றல் அணுகுமுறை மற்றும் தேசிய கல்வி முறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் மேற்கண்ட நோக்கத்தை அடைய முடியும்,” என்று அவர் ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தார்.

கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சராகவும் இருக்கும் ஜாஹிட், நேற்று யூகேஎம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறந்த தலைமைத்துவ மடாணி சிந்தனையாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டதாக அப்பதிவில் கூறினார்.

நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில், எதிர்கால கல்வி மற்றும் நிர்வாகத் தலைவர்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் அரசாங்கம் மற்றும் கல்வி நிறுவனங்களின், குறிப்பாக யூகேஎம் பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பு மற்றும் தீவிரத் தன்மையை இந்த திட்டம் பிரதிபலிக்கிறது என்றார்.

“நிர்வாகம், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களிடையே தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் நெருக்கமான ஒத்துழைப்புடன், யூகேஎம் பல்கலைக்கழகம் தொடர்ந்து சிறந்த மையமாகவும், எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகத்தின் ஆதாரமாகவும் இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :