ஆகஸ்ட் 11 வரை  150  கோடி வெள்ளியை உட்படுத்திய  18,000 வர்த்தகக் குற்றங்கள் பதிவு

கோலாலம்பூர், ஆக. 14 – இவ்வாண்டு ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 11 வரையிலான காலக்கட்டத்தில்  இணையம் மற்றும்  இதர மோசடி உள்ளிட்ட வணிக குற்றங்களின் வழி 150 கோடி வெள்ளிக்கும்  அதிகமான இழப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்தாண்டின் இதே காலத்தில் பதிவானதை விட விட 31 சதவீதம் அதிகமாகும்.

இக்காலக்கட்டத்தில்  இழப்புகளின் மதிப்பு அதிகரித்தாலும் கடந்தாண்டு இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில்  இதுபோன்ற குற்றங்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது என்று புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை (சி.சி.ஐ.டி.) இயக்குநர் டத்தோஸ்ரீ  ராம்லி முகமது யூசுப் கூறினார்.

இவ்வாண்டு ஆகஸ்டு 11ஆம் தேதி வரை மொத்தம் 18,205 வணிக குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு 81 புகார்கள் பதிவாவதை இது காட்டுகிறது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 19,720 சம்பவங்களுடன் ஒப்பிடும்போது எட்டு சதவீதம் குறைந்துள்ளது அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில், இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் வணிக குற்றங்களை ஒடுக்குவது சி.சி.ஐ.டி.யின் முக்கிய சவாலாக இருந்தாலும் அவர்கள் அதை சிறப்பாக கையாண்டு வருவதாகக் கூறிய அவர்,  முந்தைய ஆண்டுகளை விட வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் வர்த்தக குற்றப் புகார்களை எதிர்கொள்ள  தாங்கள் தயாராக இருப்பதாகச் சொன்னார்.

இவ்வாண்டு இதுவரை நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட 10,848 விசாரணை அறிக்கைகள்  இந்த விஷயம் பிரதிபலிக்கிறது.

இந்த (உயர்ந்து வரும்) போக்கு வணிகக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த காவல்துறைக்கு ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது. மேலும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் வர்த்தகக்  குற்றங்களுக்கு எதிராக போராடுவதில் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


Pengarang :