NATIONAL

இவ்வாண்டு ஜூலை வரை  நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 206 பேர் தடுத்து வைப்பு

புத்ராஜெயா, ஆக 15 – இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை தேசிய கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய 206 அந்நிய நாட்டினர் மேற்கொண்ட முயற்சியை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (எம்எம்இஏ) முறியடித்தது.

இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில் நடத்தப்பட்ட நடவடிக்கைகளின் வாயிலாகப் பல்வேறு குற்றங்களுக்காக 446 உள்ளூர் மீன்பிடிப் படகுகள் மற்றும் அத்துமீறி  கடல் எல்லையில் நுழைந்தது தொடர்பாக  68 வெளிநாட்டு மீன்பிடிப் படகுகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க நிறுவனத்தின் (எம்.எம்.இ.ஏ) இடைக்கால நடவடிக்கை  இயக்குநர் கடல்சார் வைஸ் அட்மிரல் டத்தோ சைபுல் லிசான் இப்ராஹிம் தெரிவித்தார்.

இவை தவிர, பல்வேறு குற்றங்களுக்காக  151 சரக்குக் கப்பல்கள் தடுத்து வைக்கப்பட்டன. மேலும், பல்வேறு தடைசெய்யப்பட்ட பொருட்கள் அல்லது கடத்தல் சம்பந்தப்பட்ட ஆறு வழக்குகளும் உள்ளன என அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் கடல் பகுதி எப்போதும் பாதுகாப்பாக  இருப்பதை உறுதி செய்வதற்காக மலேசியாவின் கடல் மண்டலங்களில் தவறுகள் அல்லது குற்றச் செயல்களில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினருடனும்  எம்.எம்.இ.ஏ. ஒருபோதும் சமரசம் செய்யாது என்றும் அவர் கூறினார்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வது அதிகாரிகளின் பொறுப்பு மட்டும் கிடையாது. மாறாக,  நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கம் தொடர்ந்து பராமரிக்கப்படுவதை அனைத்து தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தேசிய மாதத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் எம்.எம்.இ.ஏ. நிலையிலான தேசியக் கொடியை பறக்கவிடும் இயக்கத்தையொட்டி வெளியிட்ட அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடல்சார் குற்றங்களைத் தடுப்பதில் கடல்சார் சமூகம் அல்லது நகர்ப்புற சமூகம் அமலாக்க நிறுவனத்தின் கண்கள் மற்றும் காதுகளாக இருக்க வேண்டும்  எனவும் அவர் வலியுறுத்தினார்.

கடல்சார் குற்றங்கள் தொடர்பான தகவல்களை நாடு முழுவதும் உள்ள மாநில கடல்சார் செயல்பாட்டு மையம் அல்லது 999 (NG999) என்ற அவசர சேவைகள் வழியாக அனுப்பும்படி சமூகத்தின் அனைத்து நிலையிலான மக்களுக்கும் அவர் கோரிக்கை விடுத்தார்.


Pengarang :