NATIONAL

இ.சி.ஆர்.எல். திட்டம் 70 விழுக்காட்டிற்கும் மேல் பூர்த்தி – அமைச்சர் தகவல்

குவாந்தான், ஆக.16 – பகாங், கிளந்தான், திரங்கானு மற்றும் சிலாங்கூர் ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு கடற்கரை ரயில் (இ.சி.ஆர்.எல்.) திட்டத்தின் மேம்பாடு கடந்த மாத நிலவரப்படி 70.13 விழுக்காட்டை எட்டியுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

கட்டுமானம் சீராகவும் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின்படியும் நடக்கிறது. மேலும், கோம்பாக் முதல் கிழக்கு கடற்கரை வரையிலான பகாங், திரங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய பகுதிகளில்  இ.சி.ஆர்.எல் சேவை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என்று அரசாங்கம் நம்புகிறது என அவர் குறிப்பிட்டார்.

கிளந்தான், திரங்கானு மற்றும் பகாங் ஆகிய  மாநிலங்களில் கட்டுமானப் பணிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. சிலாங்கூரைப் பொறுத்த வரை இந்த திட்டம்  ஆரம்ப நிலையில் அதாவது 30 விழுக்காட்டிற்கும் மேல் உள்ளது. இருப்பினும், எங்கள் அட்டவணையின்படி இ.சி.ஆர்.எல் சேவை 2027 ஜனவரியில் தொடங்கும். கோத்தா பாரு (கிளந்தான்) முதல் எல்ஆர்டி கோம்பாக் (சிலாங்கூர்) வரையிலான பகுதியில் நிர்மாணிப்புப் பணிகள் எதிர்வரும் 2026ஆம் ஆண்டு இறுதியில் முடிவடையும் என அவர் குறிப்பிட்டார்.

ஒரு வருடத்திற்குப் பின்னர் கோம்பாக்கிலிருந்து போர்ட் கிள்ளான் வரையிலான தடம் நிறைவடையும். உண்மையில், போர்ட் கிள்ளான் துறைமுகத்தை கிழக்கு கடற்கரையுடன் இணைக்கும் தடம் மிகவும் முக்கியமானது.  ஏனென்றால், துறைமுகம் வரையிலான   சரக்கு போக்குவரத்தை அது எளிதாக்கும் என்று அவர் கூறினார்.

இங்குள்ள சுல்தான் அகமது ஷா அனைத்துலக மாநாட்டு மையத்தில்
குவாந்தான் துறைமுகத்தின் 50வது ஆண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட  2024  குவாந்தான் துறைமுக மாநாட்டை நிறைவு செய்யும்  நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் லோக் பேசினார்.

சரக்கு போக்குவரத்து இ.சி.ஆர்.எல் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். ஏனெனில் இது கிழக்கு கடற்கரையில் குறிப்பாகப் பகாங்கில் தொழில்துறை துறைக்கு இத்திட்டம் பல நன்மைகளை வழங்கும் என்றார் அவர்.

குவாந்தான் அல்லது கிள்ளான் என எதுவாக இருந்தாலும் தொழில்துறை பகுதிகள் மற்றும் துறைமுகங்களுக்கு இடையே சரக்குகளை கையாள்வதற்கு வசதியாக பகாங்கில் ஐந்து சரக்கு நிலையங்கள் கட்டப்படும்.

5,020 கோடி வெள்ளி திட்டமான இது,  மாநில தலைநகரங்கள், முக்கிய நகர்ப்புற மையங்கள், தொழில் மையங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், சுற்றுலா மண்டலங்கள் மற்றும் தீபகற்ப மலேசியாவில் இருக்கும் ரயில் பாதைகளுடன்  இணைப்பை ஏற்படுத்துகிறது.


Pengarang :