NATIONAL

பிரதமரின் இந்தியப் பயணம் இரு நாட்டு பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும்- டத்தோ ரமணன் நம்பிக்கை

கோலாலம்பூர், ஆக. 16 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இந்தியப் பயணம்  இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ஆர். ரமணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

பிரதமர் அன்வாருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே நிலவி வரும் அணுக்கமான நட்பின் அடிப்படையில் இந்த நம்பிக்கையை தாம் வெளிப்படுத்துவதாக அவர் சொன்னார்.

இந்தியா மலேசியாவுடன் நீண்ட காலமாக நட்புறவைப் பேணி வருகிறது. பிரதமரின் இந்த பயணத்தின் வாயிலாக மோடியுடன் மட்டுமின்றி இந்தியாவுடனான நெருக்கான நட்பின் அடிப்படையில் பொருளாதார ரீதியாக மலேசியாவுக்கு நன்மைகள் கிட்டுவதற்குரிய வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.

நேற்று முன்தினம் தலைநகர் பிரீக்பீட்சில் உள்ள நுண்கலைக் கோயிலில் (டெப்பிள் ஆஃப் பைன் ஆர்ட்ஸ்) ஸ்வர்ண சமரோஹா ஓடிஸி நாட்டிய நிகழ்ச்சிக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தமது அமைச்சின் பணி இலக்கிற்கு ஏற்ப அமைந்துள்ள கூட்டுறவுத் துறை மற்றும் தொழில்திறன் பயிற்சி, மனித வள மேம்பாடு ஆகியவற்றிலும் இந்தியாவின் பங்களிப்பை வலியுறுத்திய ரமணன், கூட்டுறவு முன்னெடுப்புகள் தவிர்த்து மலேசியா- இந்திய பொருளாதாரத்தில் புதிய பரிமாணம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகம் அண்மைய ஆண்டுகளில் அபரிமித வளர்ச்சிக் கண்டு கடந்தாண்டு 4,330 கோடி அமெரிக்க டாரலாகப் பதிவானது என அவர் சொன்னார்.

செம்பனை எண்ணெய் மற்றும் மின்னியல் பொருள்களை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவுக்கான மலேசியாவின் ஏற்றுமதி 2,630 கோடி டாரலாக உள்ள வேளையில் அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களில் பெட்ரோலியம் மற்றும் விவசாயப் பொருள்கள் பிரதானமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இந்தியாவுக்கு வருகை மேற்கொள்ளவிருக்கிறார். இந்த பயணத்தில் ஐந்து அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். பிரதமரின் இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்னாமா


Pengarang :