NATIONAL

இந்தியா-மலேசியா உறவு விரிவான நிலைக்கு உயர்வு கண்டது- வெ.450 கோடி முதலீடு பதிவு

புதுடில்லி, ஆக. 22- மலேசியா-இந்தியா இடையிலான இருதரப்பு உறவில்
குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுடன் புதுடில்லிக்கான தனது மூன்று நாள்
பயணத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று நிறைவு
செய்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு விரிவான விவேகப் பங்காளித்துவ
நிலைக்கு (சி.எஸ்.பி.) உயர்வு கண்டது மற்றும் 450 கோடி வெள்ளி
மதிப்பிலான முதலீட்டு கடப்பாடுகளும் சில முக்கிய ஒப்பந்தங்களும்
கையெழுத்தானது இந்திய-மலேசிய உறவில் புதிய மைல்கல்லாக
விளங்குகிறது.

இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை
மேம்படுத்தப்பட்ட விவேகப் பங்காளித்துவ நிலையிலிருந்து (இ.எஸ்.பி.)
விரிவான பங்காளித்துவ நிலைக்கு உயர்த்த பிரதமர் அன்வாரும் இந்தியப்
பிரதமர் நரேந்திர மோடியும் ஒப்புக் கொண்டனர்.

இதனிடையே, இந்தியாவுக்கான தனது மூன்று நாள் பயணத்தை முடித்துக்
கொண்டு தாயகம் புறப்படும் முன் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர்
அன்வார், சுமார் 800 கோடி வெள்ளி மதிப்பிலான வர்த்தக வாய்ப்புகளை
பெறுவதில் இப்பயணம் வெற்றியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இது தவிர்த்து அந்நாட்டைச் சேர்ந்த முதலீடு சார்ந்த துறைகள் மற்றும்
நிறுவனங்கள் வாயிலாக 45 கோடி வெள்ளி மதிப்புள்ள வர்த்தக
வாய்ப்புகளும் இப்பயணம் மூலம் பெறப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

இந்த பயணத்தின் போது அரசாங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும்
இடையிலான எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் வர்த்தகம்-வர்த்தகம்
இடையிலான ஏழு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன.

வர்த்தகம், இலக்கவியல் தொழில்நுட்பம், கலாசாரம், சுற்றுலா உள்ளிட்ட
துறைகளை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உள்ளடக்கியிருந்தன. பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.


Pengarang :