NATIONAL

பிளாட்ஸ் திட்டத்தின் வழி கிடைக்கும் வர்த்தக வாய்ப்புகளை- இந்திய சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள்

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், ஆக 22- பிளாட்ஸ் எனப்படும் பிளாட்பார்ம் சிலாங்கூர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பல்வேறு வர்த்தக விரிவாக்க வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளும் படி இந்திய சமூகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பிளாட்ஸ் திட்டத்தின் வாயிலாக மாநிலத்தில் 40,000க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றுள்ள வேளையில் இதில் பங்கு கொண்டுள்ள இந்திய தொழில் முனைவோரின் எண்ணிக்கை சுமார் 500 பேராக மட்டுமே உள்ளது ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்று பிளாட்ஸ் நிர்வாக கென்னத் சேம் கூறினார்.

வர்த்தகத்தை இலக்கவியல் மயமாக்குவது, வர்த்தகக் கடனுதவி, தொழில் முனைவோர் பயிற்சி உள்பட பல்வேறு முன்னெடுப்புகளை உள்ளடக்கிய இந்த திட்டத்தை 50 லட்சம் வெள்ளி வருடாந்திர மானியத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தி வருகிறது.

இந்த பிளாட்ஸ் திட்டம் மாநிலத்தில் உள்ள தொழில் முனைவோருக்கு பல்வேறு வர்த்தக வாய்ப்புகளை வழங்குகிறது. குறிப்பாக இவ்வாண்டு தொடங்கி ஹிஜ்ரா வாயிலாக பிளாட்ஸ் கடனுதவித் திட்டம் இவ்வாண்டு அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வர்த்தகர்கள் வட்டியில்லா கடனைப் பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அடுத்ததாக அரசு சார்பில் நடத்தப்படும் வர்த்தக ஊக்குவிப்புத் திட்டங்களில் குறிப்பாக, வர்த்தகக் கண் காட்சிகளிலும் தீபாவளி போன்ற பெருநாள் கால விற்பனைச் சந்தைகளில் கட்டணமின்றி பங்கு பெறுவதற்குரிய வாய்ப்பும் இத் திட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

வர்த்தகத்தை நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி விளம்பரப் படுதுவதற்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது. தங்கள் சேவை மற்றும் வர்த்தகத்தை  காணொளி மற்றும் புகைப்படங்கள் வாயிலாக  சமூக ஊடகங்களில் சந்தைப் படுத்துவது, அப்பொருள்கள் குறித்து விளக்கத்தை வழங்குவது தொடர்பான நுட்பங்கள் இந்த பயிற்சிகளில்  வழங்கப்படுகிறது.

மேலும், வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது மற்றும் அதனை முறையாக நிர்வகிப்பது தொடர்பில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களைக் கொண்டு பயிற்சிகளும் வழங்கப் படுகின்றன என்று கென்னத் குறிப்பிட்டார்.

மாநில அரசின் இந்த திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் பிளாட்ஸ் சிலாங்கூர் அகப்பக்கம் வாயிலாக தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.


Pengarang :