NATIONAL

போதைப் பொருள் கடத்தல் – ஜீவன் உட்பட நால்வருக்கு எதிராக குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு, ஆக. 22- இம்மாதம் 12ஆம் தேதி 59.5 கிலோ கிராம  எம்.டி.எம்.ஏ. வகை போதைப் பொருளைக் கடத்தியதாக நான்கு ஆடவர்களுக்கு எதிராக இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் ஆர்.ஷாலினி முன்னிலையில் மாண்டரின் மற்றும் மலாய் மொழியில் வாசிக்கப்பட்ட தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக சூ சியோன் இயே (வயது 36), லோ ஷாவ் ஜீ (வயது 26), எஸ்.ஜீவன் (வயது 39), புய் வேய் ஹோ (வயது 31) ஆகிய நால்வரும் தலையை அசைத்தனர். எனினும் அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி விடியற்காலை 12.30 மணியளவில் தாமான் அபாட், ஜாலான் டத்தோ அப்துல்லா தாஹிரில் உள்ள பங்சாபுரி ரெசிடென்சி புஞ்சாவில் 59.581 கிராம் போதைப் பொருளைக் கடத்தியதாக அவர்கள் நால்வர் மீது கூட்டாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையும் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில் 15க்கும் மேற்போகாத பிரம்படியும் விதிக்க வகை செய்யும் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி(1) பிரிவு மற்றும் 39பி(2)வது பிரிவின் கீழ் தண்டனை விதிக்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் 34 வது பிரிவின் கீழ் சேர்த்து வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

அரசுத் தரப்பில் துணை பப்ளிக் புரோசிகியூட்டர் நுர் அமீரா அலாவுடின் இந்த வழக்கை நடத்தும் வேளையில் குற்றஞ் சாட்டப் பட்டவர் கள் சார்பில் எவரும் ஆஜராகவில்லை.

இரசாயன அறிக்கையைப் பெறுவதற்கு ஏதுவாக நீதிமன்றம் இந்த வழக்கை எதிர்வரும் நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.


Pengarang :