NATIONAL

இரவு விடுதியில்  குடிநுழைவுத்துறை அதிரடிச் சோதனை- 213 அந்நிய நாட்டினர் கைது

கோலாலம்பூர், ஆக. 22- இன்று அதிகாலை தலைநகர், ஜாலான் ராஜா சூலானில் உள்ள இரவு விடுதி ஒன்றில் குடிநுழைவு துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் குடிநுழைவு தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக 213 அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

இன்று விடியற்காலை 12.45 மணி அளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ‘ஓப் கெகார்‘ நடவடிக்கையின் போது தமது குழு 300 பேரைச் சோதனையிட்டு 109 பெண்கள் மற்றும் 104 ஆண்கள் உள்ளிட் 213 அந்நிய நாட்டினரை கைது செய்ததாக குடிநுழைவு துறையின் துணை தலைமை  இயக்குநர் (நடவடிக்கை) ஜப்ரி எம்போக் தாஹா கூறினார்.

அந்த இரவு விடுதியில் உள்ள கரவோக்கே மையங்கள் 4,000 வெள்ளி தொடங்கி 30,000 வெள்ளி வரை வாடகைக்கு விடப்பட்டுள்ளன. 30,000 வெள்ளி வாடகையிலான கராவோக்கை மையத்தில் வெளிநாட்டு பெண்கள் உள்பட முழுமையான சேவைகள் வழங்கப்பட்டு வந்தன என்று அவர் சொன்னார்.

அந்த இருபத்தோரு மாடி கட்டிடத்தின்  ஒன்பதாவது மாடியில் செயல்பட்டு வந்த இந்த இரவு விடுதியில் சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகப் பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில்  இந்த சோதனை நடத்தப்பட்டது என்று அவர் இச்சோதனை நடவடிக்கைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.

இந்த சோதனை நடவடிக்கையில் கோலாலம்பூர் குடிநுழைவு துறையின் 18 அதிகாரிகளோடு மலாக்கா மாநில குடிநுழைவு துறையின் 30 அதிகாரிகளும் பங்கு கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த மையத்தில் இணையம் வழியாக முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே சேவை வழங்கப்பட்டு வந்துள்ளது. வழக்கமாக வரும் வாடிக்கையாளர்கள் தவிர நேரில் வரும் வாடிக்கையாளர்களுக்கு இங்கு அனுமதி கிடையாது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :