Paras air di LRA Sungai Semenyih. Foto ihsan Air Selangor
MEDIA STATEMENTSELANGOR

பெர்ணம் ஆற்றில் நீரின் தரம் மேம்பாடு காண்கிறது- நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படத் தொடங்கியது

ஷா ஆலம், ஆக. 25- சுங்கை  பெர்ணம் ஆற்றில் காணப்பட்ட நீர் கலங்கல் தற்போது குறைந்து நேர்மறையான அளவீட்டைப் பதிவு செய்துள்ளது.

அப்பகுதியில் பெய்த அடை மழை மற்றும் சிலாங்கூர் மாநிலத்தின் பெர்ணம் ஆற்றிலிருந்து சுமார் 30 முதல் 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பேராக் மாநிலத்தின் சுங்கை சிலிம் மற்றும் சுங்கை கெலித்திங்கில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் பெருக்கெடுத்த நீர்  பெர்ணம் ஆற்றில் கலந்ததே நீரில் கலங்கல் ஏற்பட்டதற்கு காரணம் என்று லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் கூறியது.

மேற்கண்ட காரணங்களால் வழக்கத்தைக் காட்டிலும் நீர் அதிகமாக கலங்கிய நிலையில் காணப்பட்டது. 

இவ்விவகாரம் தொடர்பில் லுவாஸ் பேராக் மாநில அதிகாரிகளைத் தொடர்பு கொண்டதோடு அம்மாநிலத்திலுள்ள சுங்கை சிலிம், சுங்கை பில், சுகை கெலித்திங் ஆகிய ஆறுகளில் சோதனைகளையும் மேற்கொண்டது என்று அவ்வாரியம் குறிப்பிட்டது.

காட்டாற்று வெள்ளம் காரணமாக நீருடன் அடித்து வரப்பட்ட சகதி படிமத்தின் அளவு அதிகமாக உள்ளதால் நீரில் காணப்படும் கலங்கல் வழக்க நிலைக்கு மாறுவது மெதுவாவே உள்ளதாக அது கூறியது.

சுங்கை பெர்ணம் ஆற்றில் நடப்பு நிலவரங்களைக் கண்காணிப்பதற்காக லுவாஸ் மற்றும் ஆயர் சிலாங்கூர் குழுக்களை அங்கு நிறுத்தியுள்ளது என்றும் லுவாஸ் தெரிவித்தது.

நீர் கலங்கல் காரணமாக பணி நிறுத்தம் செய்யப்பட்ட சுங்கை பெர்ணம் நீர் சுத்திகரிப்பு மையம நேற்றிரவு 9.00 மணி நிலவரப்படி கட்டங் கட்டமாக செயல்படத் தொடங்கியது.

இதனிடையே. நீரில் ஏற்பட்டுள்ள கலங்கல் அளவை அறிவதற்காக தாங்கள் தொடர்ச்சியான சோதனைகளை அப்பகுதியில் மேற்கொண்டு வருவதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.


Pengarang :