NATIONAL

பாக்காத்தான் சிலாங்கூர் மாநிலத்தை தொடர்ந்து ஆட்சி செய்யும்!!

ஷா ஆலம், ஏப்ரல் 6:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை தொடர்ந்து ஆட்சி செய்யும் என்று டாரூல் எசான் கல்லூரியின் துணைத் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமட் ரிஸூவான் ஓத்மான் தெரிவித்தார். கடந்த மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட சிலாங்கூர் அரசியல் கண்ணோட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது என்றார். இதற்கு முன்பு நடத்திய ஆய்வில் 33% ஆக இருந்தது, ஆனால் தற்போதைய சூழ்நிலையில் 41% ஆக உள்ளது பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் என்றார்.

”  இந்த சூழ்நிலை தொடர்ந்து சென்றால், 14-வது பொதுத் தேர்தலில் அம்னோ தேசிய முன்னணியின் செல்வாக்கு குறைந்துவிடும்,” என்று ஜடிஇ பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற ‘மலேசிய ஆய்வு 2018: யார் மலேசிய மக்களின் தேர்வு?’ என்ற கருத்தரங்கில் கூறினார்.

மேலும் கூறுகையில், பாக்காத்தான் புற நகரில் 61% மலாய்காரர்களின் ஆதரவை பெற்றுள்ளது. சீனர்கள் 66% மற்றும் இந்தியர்கள் 50% ஆதரவை பெறுவதில் வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்று விவரித்தார்.

அதே வேளையில், தொகுதி எல்லை  மறுசீரமைப்பு நடவடிக்கையினால் சிலாங்கூர் மாநிலத்தில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.

”  தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மலாய்காரர்களின் ஆதரவு தேசிய முன்னணிக்கு அதிகரிக்கும் என்ற எண்ணத்தில் ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும், ஐடிஇ நடத்திய ஆய்வில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மலாய்காரர்களின் ஆதரவு பாக்காத்தானுக்கு சிறப்பாக இருக்கிறது,” என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Pengarang :