SELANGOR

இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தளங்கள் மீண்டும் பல எஸ்ஓபிகளை பின்பற்றி செயல்படும் !!!

ஷா ஆலம், ஜூன் 18:

மீட்பு நிலை நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (பிகேபிபி) காலக்கட்டத்தின் போது சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இஸ்லாம் அல்லாத வழிப்பாட்டு தலங்கள், விரிவான செயல்பாட்டு தர விதிமுறை எஸ்ஓபியை பின்பற்றி மீண்டும் செயல்பட அம்மாநில அரசாங்கம் முடிவு எடுத்திருக்கிறது.

வழிப்பாட்டு தலங்களில் அதிகமானோர் கூடுவதால், சமயம் தொடர்பான தொற்றை தடுக்கவும், இந்நோயை முற்றாகத் துடைத்தொழிக்கவும் இவ்விரிவான எஸ்ஓபி தயார் செய்யப்பட்டதாக, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஜூன் 15-ஆம் தேதி, சிவப்பு மண்டல பகுதிகளை தவிர்த்து நாடு முழுவதிலுமுள்ள அனைத்து வழிப்பாட்டுத் தலங்களும் மீண்டும் செயல்படுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது.

அதனைத் தொடர்ந்து, சுகாதார நிரந்தர செயற்குழு, கொவிட்-19 மாநில பணிக்குழு, HESI எனப்படும் இஸ்லாம் அல்லாத சமயம் தொடர்பான செயற்குழு ஆகியவை ஒன்றிணைந்து இக்கூடுதல் எஸ்ஓபியை தயார் செய்திருப்பதாக கணபதி ராவ் கூறினார்.

இன்று, வியாழக்கிழமை சிலாங்கூர், ஷா அலாமில் உள்ள அனெஸ் மண்டபத்தில் நடைப்பெற்ற இஸ்லாம் அல்லாத வழிப்பாட்டு தலங்களுக்கான விரிவான எஸ்ஓபி குறித்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

இந்நிலையில், அனைத்து வழிப்பாட்டு தலங்களும் http://www.selangkah.my/main/daftar எனும் அகப்பக்கத்தின் மூலம் தங்களின் வழிப்பாட்டு தலங்களின் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அதோடு, வழிப்பாட்டுத் தலங்களுக்கு வரும் பொதுமக்கள் SELangkah QR முறையை பயன்படுத்தி தங்களின் சுய விவரங்கள் மற்றும் உடல் உஷ்ண அளவையும் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதனிடையே, நிர்ணயிக்கப்பட்டிருக்கும் SOP-யை பின்பற்றாத வழிப்பாட்டு தலங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், மீண்டும் மூடுவதற்கான சாத்தியம் இருப்பதாக, சிலாங்கூர் மாநில சுகாதாரம், சமூகநலன், பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டு செயற்குழு தலைவர், டாக்டர் சித்தி மரியா பிந்தி மாமுட் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

— பெர்னாமா


Pengarang :