NATIONAL

நாட்டின் உருவாக்கத்திற்கு ருக்குன் நெகாரா கோட்பாடு அடித்தளம் பேரரசர் உரை

கோலாலம்பூர், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட ருக்குன் நெகாராகோட்பாடு தேசியத் தினத்தைக் கொண்டாடும் ஒவ்வொரு முறையும் வாசிக்கப்படும் வெறும் சுலோகமாக அல்லாமல் நாட்டின் உருவாக்கத்திற்கும் தேசிய ஒற்றுமைக்கும் அடித்தளமான ஒன்றாக விளங்குவதாகப் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா கூறினார்.

 

ருக்குன் நெகாரா கோட்பாடுகளின் உணர்வுகளும் ஆன்மாவும் தினசரி வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் போற்றப்பட்டுக் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மக்கள் எவ்வாறு இன, சமய, மத, கலாசார வேற்றுமைகளைக் கடந்து ஒன்றுபட்டு வாழலாம் என்பதை விளக்கும் வழிகாட்டியாக ருக்குன் நெகாராவின் ஐந்து கோட்பாடுகள் விளங்குகின்றன என்றார் அவர்.

 

வலுவான சமய நம்பிக்கையின் அடிப்படையிலான ஒரு நாட்டின் உருவாக்கத்தை ருக்குன் நெகாரா வலியுறுத்துகிறது. அதே சமயம் நாட்டின் இறையாண்மையின் அடையாளமாகவும் குடையாகவும் விளங்கும் மாமன்னருக்கு விசுவாசம் செலுத்தவும் மக்களை இந்தக் கோட்பாடு வலியுறுத்துகிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

ருக்குன் நெகாரா உருவாக்கத்தின் 50ஆம் ஆண்டு நிறைவு மற்றும் 2020 தேசியத் தினக் கொண்டாட்டத்தையொட்டிப் பொதுமக்களுக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் பேரரசர் இவ்வாறு குறிப்பிட்டார்.


Pengarang :