NATIONAL

அனைத்து இனத்திற்கும் நீதி கிடைப்பதே சுதந்திரம் ! டத்தோஸ்ரீ அன்வார் கருத்து

 

ஷா ஆலம், சுலோகங்களை முழங்குவது மற்றும் நாட்டுப்பற்றைப் பறைசாற்றக் கொடிகளைப் பறக்கவிடுவதை வைத்துச் சுதந்திரத்தை அளவிட முடியாது. மாறாக, விடுதலைப் பெறுவதற்கான மனவுறுதியும் அனைத்து இனங்களுக்கும் நீதி கிடைப்பதுமே உண்மையான சுதந்திரமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மக்கள் வறுமை மற்றும் பொருளாதார இடைவெளியில் அல்லல் பட்டு கொண்டிருக்கும் போது அரசியலில் இருப்போர் தொடர்ந்து வளங்களைச் சேர்த்துக் கொண்டிருப்பது உண்மையான சுதந்திரம் அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மீண்டும் மீண்டும் ஊழல், முறைகேடு, நிர்வாக அம்சங்களில் ஊழல் போன்றவை சுதந்திரத்தின் உண்மையான அர்த்தமா? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

நாட்டு மக்கள் தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்து சந்தேகம் கொண்டிருக்கும் பட்சத்தில் சுதந்திரத்தின் உண்மையான பொருள்தான் என்ன என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

வெறுப்புணர்வு மற்றும் ஒருவரை ஒருவர் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதைத் தவிர்த்து புத்துணர்வுடன் சுதந்திரத் தினத்தைக் கொண்டாடும்படி மலேசியர்களை அவர் தனது தேசியதின வாழ்த்துச் செய்தியில் கேட்டுக் கொண்டார்.

சிந்தனை, பொருளாதாரம் மற்றும் நிர்வாக நடைமுறை ரீதியாக நேசத்திற்குரிய நமது நாட்டை வளப்படுத்தும் தொலைநோக்கு லட்சியத்தை நாம் கொண்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :