SELANGOR

சுகாதாரப் பாதுகாப்பு, சத்துணவு உதவித் திட்டம் விரிவாக்கம் காணும் கணபதி ராவ் அறிவிப்பு

ஷா ஆலம், செப். 1- சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சத்துணவு உதவிப் பொருள் திட்டத்தை அடுத்தாண்டில் மேலும் அதிகரிக்கப் பரிவுமிக்க துறைக்கான சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுதி பூண்டுள்ளது.

இந்த உதவிப் பொருள் பெறுவோர் எண்ணிக்கையை வரும் ஆண்டில் ஐந்து மடங்காக அதிகரிக்கத் தாங்கள் திட்டமிட்டுள்ளதாக ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காரணமாக மேற்கொள்ள முடியாமல் போன இதர திட்டங்களுக்கான மானியங்கள் கைவசம் உள்ளதால் இத்திட்டத்தை இவ்வாண்டிலேயே மேற்கொள்ளத் தாங்கள் திட்டமிட்டுள்ளாதாக அவர் தெரிவித்தார்.

“இத்திட்டத்திற்கான உதவிப் பொருள்களைப் பெங்குளுக்களிடம் ஒப்படைப்பதற்காக நான் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டேன். அவர்கள் இத்திட்டத்தைப் பெரிதும் வரவேற்றதோடு இந்த உதவிப் பொருள்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 500ஆக அதிகரிக்கும்படியும் கேட்டுக் கொண்டனர்” என்றார் அவர்.

இந்தத் திட்டத்தின் வாயிலாக வழங்கப்படும் உதவிப் பொருள்கள் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் ஆதரவற்ற சிறுவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்றும் கணபதி ராவ் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக அவர், ஏழை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கு ஏதுவாக மாநிலத்தில் உள்ள 57 மாவட்டப் பெங்குளுக்களிடம் 347,700, ரிங்கிட் மதிப்புள்ள உதவிப் பொருள்களை ஒப்படைத்தார். கிருமி நாசினி, மைலோ,நெஸ்டம், ஊட்டச்சத்து பிஸ்கெட் போன்றவற்றை அந்த உதவிப் பொருள்கள் உள்ளடக்கியுள்ளன.

 


Pengarang :