NATIONAL

மலேசியா-சிங்கப்பூர் சென்று திரும்பும் விதிமுறை  திட்டத்தில் ஒரு கோவிட்- 19 சம்பவம் பதிவு

கோத்தா திங்கி, செப் 6- பி.சி.ஏ. எனப்படும் சிங்கப்பூர்-மலேசியா இடையிலான சென்று திரும்பும் திட்டத்தில் ஒரு கோவிட்-19 சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில் பதிவான  சம்பவம் இதுவாகும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா கூறினார்.

எனினும், ஆர்.ஜி.எல். எனப்படும் பரஸ்பர பச்சை பாதை திட்டத்தில் இதுவரை எந்த சம்பவமும் பதிவு செய்யப்படவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

இத்தகைய கோவிட் சம்பவங்கள் அடையாளம் காணப்படும் பட்சத்தில் நாம் விரைந்து செயல்படுவதோடு சம்பந்தப்பட்ட நோயாளிகளின் பயணம் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய விபரங்களை திரட்டுவோம்.

சம்பந்தப்பட்ட நோயாளி மலேசியராக இருந்தால் அவர் உடனடியாக தனிமைப்படுத்தப் படுவார். அதே சமயம் சிங்கப்பூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அந்த நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணச் சொல்வோம் என்று அவர் சொன்னார்.

இங்குள்ள சுங்கை ரெங்கிட் சுகாதார மையத்திற்கு வருகை புரிந்தப் பின்னர்  செய்தியாளர்களிடம் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கோவிட் நோய்த் தொற்று பீடிக்கப்பட்ட நபர் சிங்கப்பூரில் வேலை செய்து வரும் 35 வயது மலேசிய ஆடவர்  என்றும் பி.சி.ஏ. திட்டத்தின் கீழ் அவர் கடந்த ஆகஸ்டு 29ஆம் தேதி மலேசியா திரும்பினார் என்றும் அடாம் பாபா மேலும் கூறினார்.

இந்த நோய்த் தொற்று காரணமாக கடந்த 2ஆம் தேதி  மாநிலத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த ஆடவரின் நிலை தற்போது சீராக உள்ளது என்றார் அவர்.

கடந்த ஆகஸ்டு மாதம் 17ஆம் தேதி முதல் இன்று வரை பி.சி.ஏ. திட்டத்தின் கீழ் 2,647 பேரும் ஆர்.ஜி.எல். திட்டத்தின் கீழ் 815 பேரும் சிங்கப்பூரிலிருந்து மலேசியா திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் பயணம் மேற்கொள்ளும் பலதரப்பட்ட தரப்பினரின் தேவைகளை கையாளும் நோக்கில் பி.சி.ஏ. மற்றும் ஆர்.ஜி.எல். திட்டங்கள் அமல் செய்யப்பட்டன.


Pengarang :