SELANGOR

வீட்டின் எதிரே இனி வியாபாரம் செய்யலாம் சிலாங்கூர் அரசு அனுமதி

ஷா ஆலம், செப் 17- வீட்டின் எதிரே வியாபாரம் செய்ய விரும்புவோருக்கு லைசன்ஸ் வழங்க சிலாங்கூர் அரசு அனுமதி அளித்துள்ளது.

இதற்கான ஒப்புதலை மாநில ஆட்சிக்குழு இரு வாரங்களுக்கு முன்னர் வழங்கியதாக தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் தெரிவித்தார்.

பொதுமக்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளின் ஓரங்களில் வியாபாரம் செய்வதை தவிர்ப்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் சொன்னார்.

ஆர்வம் உள்ளவர்கள் இந்த வியாபார அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் எனக் கூறிய அவர், டைபாய்டு தடுப்பூசி போடுவது, சுத்தத்தைப் பேணுவது போன்ற விதி முறைகளை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

ஒராண்டுக்கு இந்த வியாபார அனுமதி வழங்கப்பட்டாலும் தொடர்ந்து வியாபாரம் செய்வதை உறுதி செய்வதற்காக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை லைசன்ஸை புதுப்பிக்க வேண்டும் என்றார் அவர்.

சித்தம் எனப்படும் சிலாங்கூர் இந்தியர் தொழில் ஆர்வலர் மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினர்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி தொடர்ந்து வியாபாரம் செய்து வருவோருக்கு முக்கிய இடங்களில் வியாபாரம் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று ரோட்சியா மேலும் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை மந்திரி புசார் விரைவில் வெளியிடுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :