ECONOMYNATIONAL

உள்நாட்டு முதலீட்டாளர்களுடன் நட்புறவை வளர்ப்பதில் இன்வெஸ்ட் சிலாங்கூர் தீவிரம்

இஸ்கந்தார் புத்ரி, செப் 25- உள்நாட்டு முதலீட்டாளர்களுடன் நட்புறவை
வளர்ப்பதில் இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் எனப்படும் உள்நாட்டு மற்றும்
அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.

கோவிட்-19 பரவலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற பொருளாதார
சூழலைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள முதலீட்டாளர்களுடன்
நட்புறவு மற்றும் பங்காளித்துவத்தை வளர்ப்பதில் தாங்கள் தீவிரம் காட்டி
வருவதாக இன்வெஸ்ட் சிலாங்கூர் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை
அதிகாரி டத்தோ ஹசான் அசாரி இட்ரிஸ் கூறினார்.

இந்த நடவடிக்கையின் வாயிலாக சிலாங்கூர் மாநிலத்தின் திட்டங்களை
குறிப்பாக நேரடி தொடர்பு இல்லாமல் இயங்களை வாயிலாக வர்த்தகம் செய்ய
வகை செய்யும் சிலாங்கூர் வர்த்தக மையம் பற்றிய தகவல்களை
தொழில்துறையினருடன் பகிர்ந்து கொள்வதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று
அவர் சொன்னார்.

இங்கு நடைபெற்ற முயற்சிகளும் வாய்ப்புகளும் எனும் முதலீட்டு ஊக்குவிப்பு
நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் அவர்
இதனைக் குறிப்பிட்டார்.

மலேசிய தொழிற்சாலை நடத்துநர் சம்மேளனத்தின் ஜோகூர் கிளையின்
ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் 40 தொழில்துறையினர் கலந்து
கொண்டனர்.

சபா மற்றும் பினாங்கிற்கு அடுத்து ஜோகூரில் இந்த நிகழ்வைத் தாங்கள்
நடத்துவதாக டத்தோ ஹசான் சொன்னார்.

சிலாங்கூர் மாநிலத்தின் 6.7 விழுக்காட்டு பொருளாதார வளர்ச்சி, விமான
நிலையங்கள் மற்றும் துறை முகம் போன்ற அடிப்படை வசதிகள், மனித வளம்
போன்ற அம்சங்கள் முதலீட்டை ஈர்ப்பதில் இம்மாநிலத்திற்கு சாதகமான
அம்சங்களாக விளங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :