SELANGOR

பாதுகாக்கப்பட்ட வன அழிப்பு பரிந்துரைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

கோல லங்காட், செப் 28- இவ்வாண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட வட கோல லங்காட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அழிப்பது தொடர்பான பரிந்துரைக்கு சிலாங்கூர் அரசு 45,000 எழுத்துப் பூர்வமான அட்சேபங்களைப் பெற்றுள்ளது.

அந்த ஆட்சேபங்கள் பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் பெறப்பட்டதாக சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹி லோய் சியான் கூறினார்.

சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் விளைவுகள், அந்த வனப்பகுதியில் உள்ள தாவர வகைகள் மற்றும் உயிரினங்களுக்கு உண்டாகும்  பாதிப்பு, சமூகவியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஏற்படும் விளைவுகள் ஆகிய மூன்று அம்சங்களை அந்த ஆட்சேப மனுக்கள் கொண்டிருந்தன என்று அவர் சொன்னார்.

பொது மக்கள் தவிர்த்து தீபகற்ப மலேசியா காட்டிலாகா, பூர்வக்குடியினர் மேம்பாட்டுத் துறை, மலேசிய வடிவமைப்புக் கழகம் மற்றும் மலேசிய வன ஆராய்ச்சிக் கழகம் ஆகிய துறைகளிடமிருந்தும் தாங்கள் ஆட்சேபத்தைப் பெற்றதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது தவிர, புக்கிட் சீடிங் பூர்வக்குடியினர் கிராம நிர்வாக மன்றம், பூசுட் பாரு பூர்வக்குடியினர் நிர்வாக மன்றம்,  கம்போங் ஜென்ஜாரோம் கிராம நிர்வாக மன்றம், சவுஜானா புத்ரா குடியிருப்பாளர் சங்கம் ஆகிய தரப்பினரும் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் என்றார் அவர்.

இங்குள்ள கேரித் தீவில் இன்று நடைபெற்ற வட கோல லங்காட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அழிப்பது தொடர்பில் பொதுமக்களிடம்  கருத்து கேட்கும்   நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்

இவ்விவகாரம் தொடர்பில் முன்வைக்கப்படும்  அனைத்து ஆட்சேபேங்களும் மாநில ஆட்சிக்குழுவில் துல்லியமாக ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வீடமைப்பு உள்ளிட்ட மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வதற்கு ஏதுவாக வட கோல லங்காட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அழிப்பது தொடர்பான பரிந்துரையை மாநில அரசு கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி முன்வைத்தது.

சுமார் 7,247 ஹெக்டர் நிலப்பரப்பைக் கொண்ட அந்த பகுதி  பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக கடந்த 1927ஆம் ஆண்டில் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. சவுஜானா புத்ரா வீடமைப்புத் திட்டம், இலிட் நெடுஞ்சாலை, பூர்வக்குடியினர் கிராமங்கள், செம்பனைத் தோட்டங்கள் போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் போக தற்போது 957.6 ஹெக்டர் நிலம் எஞ்சியுள்ளது.

 

 

 

 

 


Pengarang :