SELANGOR

பெர்சியாரான் ஷோரியா சாலை போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது

ஷா ஆலம், செப் 29- சிட்டி ஆஃப் எல்மினாவில் அமைக்கப்பட்டுள்ள 4.43 கிலோமீட்டர் நீளம் கொண்ட பெர்சியாரான் ஷோரியா சாலை இன்று பின்னிரவு முதல் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

இந்த சாலை இவ்வட்டாரத்திலுள்ள சுமார் இருபதாயிரம் குடியிருப்பாளர்களுக்கு குறிப்பாக சவுஜானா உத்தாமா மற்றும் எல்மினா கிரீன் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் பயன் தரும் என்று சைம் டார்பி புரோப்பர்ட்டிஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ அஸ்மிர்  மரைக்கான் கூறினார்.

இந்த சாலை அமைக்கப்பட்டதன் வழி சௌஜானா உத்தாமாவிலிருந்து கத்ரி நெடுஞ்சாலைக்குச் செல்வதற்கான நேரம் வெகுவாக குறைக்கப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த சாலை வாகனப் போக்குவரத்தைப் பரவலாக்கும் அதே வேளையில் எல்மினா கிரீன் மற்றும் எல்மினா சென்ட்ரல் பார்க் பகுதியைச் சேர்ந்தவர்களின் பயண நேரத்தை 20 நிமிடங்கள் வரை குறைக்கும் என்றார் அவர்.

பெர்சியாரான் ஷோரியா சாலையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த சாலை எல்மினா கிரீன் மற்றும் புசாட் பண்டார் எல்மினாவை இணைக்கும் அதேவேளையில் சிட்டி  ஆஃப் எல்மினாவுடன்  இவ்வாண்டு இறுதியில் பூர்த்தியாகவுள்ள டாமன்சாரா- ஷா ஆலம் நெடுஞ்சாலையுடன் நேரடி இணைப்பையும் கொண்டிருக்கும்.

இந்த சாலையை அடிப்படை வசதிகளுக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஸாம் ஹஷிம், விளையாட்டு மற்றும் இளம் தலைமுறையினர் மேம்பாட்டிற்கான ஆட்சிக்குழு உறுப்பினரும் பாயா ஜெராஸ் சட்டமன்ற உறுப்பினருமான முகமது கைருடின் ஓத்மான், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா ஆகியோர்  அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தனர்.


Pengarang :