SELANGOR

வெ.10 லட்சம் அபராதம் 3 ஆண்டுச் சிறை ஆறுகளை மாசுபடுத்துவோருக்கு கடும் தண்டனை

ஷா ஆலம், அக் 4- சிலாங்கூரில் ஆறுகளை மாசுபடுத்துவோருக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது. இத்தகைய குற்றங்களைப் புரிவோருக்கு பத்து லட்சம் வெள்ளி வரையிலான அபராதம் மற்றும் மூன்று ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இத்தகைய கடும் சட்டங்களை அமல்படுத்துவதற்கு ஏதுவாக 1999 ஆம் ஆண்டு சிலாங்கூர் நீர் நிர்வாக வாரிய (லுவாஸ்) சட்டத்தின் 79ஆவது பிரிவில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரில் இதன் தொடர்பிலான மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இத்தகைய குற்றங்களைப் புரிவோருக்கு இரண்டு லட்சம் வெள்ளிக்கும் குறையாத மற்றும் பத்து லட்சம் வெள்ளிக்கும் மேற்படாத தொகையை அபராதமாகவும் மற்றும் கூடின பட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கவும்  சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று அவர் சொன்னார்.

தற்போதுள்ள சட்ட விதிகளின் படி இத்தகைய குற்றங்களைப் புரிவோருக்கு கூடுதல் பட்சம் ஒரு லட்சம் வெள்ளி அபராதம், அல்லது மூன்றாண்டுச் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

உலக ஆறுகள் தினத்தை முன்னிட்டு யு.எஸ்.ஜே. ரிவர் பிராண்ட் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டார். மந்திரி புசாரின் உரையை அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஸாம் ஹஷிம் வாசித்தார்.

நீர் வளங்கள் குறிப்பாக ஆறுகள் மாசுபடுத்தப்படும் சம்பவங்களை மாநில அரசு கடுமையாகக் கருதுவதாக கூறிய அமிருடின், நீர் நிர்வாகம் தொடர்பான விரிவான அம்சங்களை இந்த சட்டத் திருத்தம் உள்ளடக்கியிருக்கும் என்றார்.

சுங்கை சிலாங்கூர், சுங்கை கிள்ளான் மற்றும் சுங்கை லங்காட் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணிக்க சிறப்பு பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்


Pengarang :