NATIONALSELANGOR

செமினி ஆற்றில் தூய்மைக்கேடு இருவர் கைது

கோலாலம்பூர், அக் 7- சுங்கை செமினி மற்றும் நெகிரி செம்பிலானிலுள்ள சுங்கை பாத்தாங் பெனாரில் நீர் துய்மைக்கேடு ஏற்படுவதற்கு காரணமாக இருந்ததாக நம்பப்படும் இரு ஆடவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.

முப்பது மற்றும் நாற்பது வயதுடைய அவ்விரு ஆடவர்களும் நீலாய் நோக்கி வந்து கொண்டிருந்த போது கோத்தா பாருவில் கைது செய்யப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் நெகிரி செம்பிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், இதன் தொடர்பிலான முழுமையான விசாரணை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்றார். இவ்விவகாரத்தில் தாங்கள் அவசரம் காட்ட முடியாது என்பதால் சிறிது கால அவகாசம் கொடுக்கும்படி அனைத்து தரப்பினரையும் அவர் கேட்டுக் கொண்டார்.

இங்குள்ள செராஸ் போலீஸ் கல்லுரியில் வர்த்தக குற்ற விசாரணை முறையை மேம்படுத்துவது மீதான கருத்தரங்கை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.  இதனிடையே இவ்விவகாரம் குறித்து கருத்துரைத்த நெகிரி செம்பிலான் மாநில துணைப் போலீஸ் தலைவர்  முதன்மை உதவி ஆணையர்  சே ஜக்காரியா ஓத்மான், தேசிய நீர் சேவை ஆணையம் கடந்த திங்களன்று செய்த புகாரின் அடிப்படையில் கைதான இருவர் மீதும் குற்றவியல் சட்டத்தின் 430வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

சுவான் பிளஸ் இண்டஸ்ட்ரீஸ் தொழிற்சாலை அமைந்துள்ள ஜாலான் இமாஸ் சாலையை ஒட்டியுள்ள பாத்தாங் பெனார் ஆற்றின் அருகே உள்ள இடத்தில் சோதனை மேற்கொள்ளப் பட்டது. அப்பகுதிதான் கழிவுகளை கொட்டும் இடமாக பயன்படுத்தப்பட்டதாக நம்பப் படுகிறது. சோதனைக்காக சில மாதிரிகளை தடவியல் நிபுணர்கள் அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளனர் என்றார் அவர்.

இது தவிர லோரி ஒன்றையும் போதுக்குவரத்து தொடர்பான சில ஆவணங்களையும் தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கைதான இருவரும் கிளந்தானிலுள்ள போக்குவரத்து நிறுவனத்தில் வேலை செய்யும்  லோரி ஒட்டுநர் மற்றும் உதவியாளர் எனக் கூறிய அவர், அந்த இருவரும் விசாரணைக்காக இன்று தொடங்கி ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

 


Pengarang :