NATIONALPENDIDIKANSELANGOR

கிள்ளானிலுள்ள அனைத்து 142 பள்ளிகளும் நாளை தொடங்கி 23ஆம் தேதி வரை மூடப்படும்

புத்ரா ஜெயா, அக் 7- கோவிட்-19 நோய் தொற்று பரவல் காரணமாக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட கிள்ளான் மாவட்டத்தின் அனைத்து 142 பள்ளிகளும் நாளை தொடங்கி இம்மாதம் 23ஆம் தேதி வரை மூடப்படும்.

கிள்ளான் மாவட்டத்திலுள்ள பள்ளிகளோடு சபா மாநிலத்தின் சண்டகான், பாப்பார், துவாரான் மாவட்டங்களில் உள்ள 242 பள்ளிகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. 

கல்வியமைச்சின் கீழ் செயல்படும் ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளிகள் மட்டுமின்றி கல்வியமைச்சில் பதிவு செய்துள்ள தனியார் பள்ளிகளும் மூடப்படும். இது தவிர, தங்கும் விடுதியை கொண்டுள்ள கல்லூரிகளும் தொழில்நுட்ப  கல்லூரிகளுக்கும்  இந்த நடைமுறை பொருந்தும் என அது கூறியது.

பள்ளிகளின் தங்கும் விடுதிகளில்  மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் தங்கியிருக்கும் பிள்ளைகளை அழைத்துச் செல்லும்படி பெற்றோர்களை கல்வியமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

எனினும், இந்த காலக்கட்டத்தில் தங்கும் விடுதியிலே தங்கியிருக்க விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட விடுதிகளின் வார்டன்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, கிள்ளான் மற்றும் சபா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி நிபந்தனையுடன் கூடிய  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படுவதாக பாதுகாப்புத் துறைக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியிருந்தார்.


Pengarang :