PENDIDIKANSELANGOR

உயர்கல்வி வளர்ச்சிக்கு 2.92 கோடி வெள்ளி ஒதுக்கீடு

ஷா ஆலம், அக் 30- சிலாங்கூரிலுள்ள உயர்கல்விக் கூடங்கள் மேலும் ஆக்கத்திறனுடன் செயல்படுவதை உறுதி செய்வதற்காக சிலாங்கூர் மாநிலத்தில் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 2 கோடியே 92 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் மிக அதிகமாக அதாவது 150 உயர்கல்விக் கூடங்களை சிலாங்கூர் கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு இந்த ஒதுக்கீடு செய்யப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

உயர்கல்வியைப் பொறுத்தவரை சிலாங்கூர் தனித்துவமிக்க மாநிலமாக விளங்குகிறது. காரணம் அது சொந்த உயர்கல்விக் கூடங்களைக் கொண்டுள்ளது. யுனிசெல் எனப்படும் சிலாங்கூர் பல்கலைக்கழகம், குயிஸ் எனப்படும் அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக கல்லுரி, சிலாங்கூர் திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப மையம் ஆகியவையே அந்த உயர்கல்விக் கூடங்களாகும் என்றார் அவர்.

இது தவிர, நிர்வாக சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக யுனிசெல் மற்றும் குயிஸ் ஆகிய உயர்கல்விக் கூடங்களுக்கு கடனுதவியாக 3.5 கோடி வெள்ளி வழங்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்விரு கல்வி ஸ்தாபனங்களும் தங்களின் நிதி நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த கடனுதவி உதவும் என்றார் அவர்.


Pengarang :