அனைத்துலக விருது பெற்ற சுங்கை பூலோ மருத்துவமனையின் இரு மருத்துவர்களுக்கு சிலாங்கூர் சுல்தான் வாழ்த்து

ஷா ஆலம், நவ 2– அனைத்துலக சுகாதார விருதை (ஜி.எச்.ஏ. 2020) வென்ற சுங்கை பூலோ மருத்துவமனையை சேர்ந்த இரு மருத்துவர்களுக்கு சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 நோய்த் தொற்றை முறியடிப்பதில் டாக்டர் சி. சுரேஷ்குமாரும் டாக்டர் சைபுல் அஸ்மான் ஜக்காரியாவும் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு குறித்து தாம் பெருமிதம் அடைவதாக சுல்தான் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் முன்களப் பணியாளர்கள் அனைவரும் மனவுறுதியுடனும் திறனுடனும் தொடர்ந்து பணியாற்றுவர் என தாம் நம்புவதாக சிலாங்கூர் அரண்மனையின் அதிகாரப்பூர்வ முகநூல் வழி வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிராக நடத்தும் போராட்டத்திற்காக சுங்கை பூலோ மருத்துவமனையின் தொற்று நோய்த் துறையின் தலைவர் டாக்டர் சி.சுரேஷ்குமாரும் மயக்க மருந்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் சைபுல் அஸ்மானும் நேற்று ஜி.எச்.ஏ.2020 விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பான கண்காணிப்பு பணிளை ஊராட்சி மன்றங்களும் போலீசாரும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் சுல்தான் கேட்டுக் கொண்டார்.

சில தரப்பினர் குறிப்பாக உணவகங்கள் மற்றும் பொழுது போக்கு மையங்கள் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை சிறிதும் பொருட்படுத்தாமல் அலட்சியப் போக்குடன் செயல்படுவது குறித்து தாம் ஏமாற்றமடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் அமல்படுத்தப்பட்ட சீரான செயலாக்க நடைமுறைகளை பின்பற்றுவதில் தன்மூப்பாக செயல்பட்டால் கோவிட் நோய்த் தொற்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீவிரமாக பரவும் எனத் தாம் அஞ்சுவதாக அவர் மேலும் சொன்னார்.

 

 

 

 


Pengarang :