ஸ்ரீ கெம்பாங்கான் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளுக்கு உணவுப் பொருள் விநியோகம்

ஷா ஆலம், ஜன 3– ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்றத் தொகுதியின் மூன்று பகுதிகளில் உள்ள 300 வசதி குறைந்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

சுமார் 40 வெள்ளி மதிப்பிலான அந்த உணவுப் பொருள் பொட்டலங்கள் ஸ்ரீ அமான், புக்கிட் செர்டாங், செக்சன் 5 மற்றும் பாயு புக்கிட் செர்டாங் அடுக்குமாடி குடியிருப்புகளைச் சேர்ந்த வசதி குறைந்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இயான் யோங் வா கூறினார்.

குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர், தனித்து வாழும் தாய்மார்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் சுமையை ஒரளவு குறைக்கும் நோக்கிலான இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு சுபாங் ஜெயா மாநகர் மன்றம் 12,000 வெள்ளியைச் செலவிட்டதாக அவர் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடுமையான பொருளாதார  சிரமத்தை எதிர்நோக்கியுள்ள இந்த சமயத்தில் இத்தகைய உதவியை வழங்கிய மாநகர் மன்றத்திற்கும் சிலாங்கூர் அரசாங்கத்திற்கும் உதவி பெற்றவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொது முடக்கம் அமலாக்கம்  கண்டது முதல் அமல்படுத்தப்பட்டு வரும் இந்த உணவுப் பொருள் உதவித் திட்டத்தில் இதுவரை 2,000 பேர் பயன்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தவிர, இத்தொகுதியைச் சேர்ந்த 200 ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு இவ்வாண்டில்  பள்ளி உபகரணப் பொருள்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

வசதி குறைந்த குடும்பங்களை மையமாக கொண்டு அமல்படுத்தப்பட்ட மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் எனும் திட்டத்தின் கீழ் இரு மாதங்களுக்கு முன்னர் இந்த பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது  என அவர் சொன்னார்.

நிதிச் சுமையை எதிர்நோக்கியுள்ள மாணவர்களுக்கு இத்தகைய உதவிகளைச் செய்ய தாங்கள் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :