அந்நிய சுற்றுப்பயணிகளை ஊக்குவிக்க ‘பச்சைத் தடத்தை‘ அறிமுகப்படுத்துவீர்- சிலாங்கூர் அரசு கோரிக்கை

ஷா ஆலம், ஜன 5– அடுத்தாண்டு பிப்ரவரி மாதவாக்கில் கோவிட்-19 தடுப்பூசி நாட்டிற்கு வந்தவுடன் அந்நிய சுற்றுப்பயணிகளை ஊக்குவிக்கும்  விதமாக ‘பச்சைத் தடத்தை‘ உருவாக்கும்படி மத்திய அரசை சிலாங்கூர் கேட்டுக் கொண்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் முழுமையாக முடிவுக்கு வரும்வரை காத்திராமல் அனைத்துலக எல்லைகளை திறக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலாத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

நோய்த் தொற்று குறைந்து காணப்படும் சிங்கப்பூர், புருணை மற்றும் தைவான் போன்ற நாடுகளுடன் அரசாங்கம் இப்போதே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சுற்றுப்பயணிகள் நாட்டிற்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் ஏதுவாக பச்சை தடம் உருவாக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டவுடன் அந்நிய நாட்டினரின் வருகைக்கு நாம் வாய்ப்பளிக்க வேண்டும். ஓராண்டுகால காத்திருப்புக்குப் பின்னர் சுற்றுலாத் துறையை மீட்சியுறச் செய்வதற்கு நமக்கு இருக்கும் வாய்ப்பு இதுவாகும் என்று அவர் சொன்னார்.

நேற்று இங்கு நடைபெற்ற சுற்றுலா துறையினரின் நலன் காக்கப்படுகிறதா? எனும் தலைப்பிலான விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அடுத்தாண்டு இறுதிக்குள் நோய்த் தொற்றின் தாக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஏதுவாக இலவச தடுப்பூசித் திட்டத்தை அரசாங்கம் விரைந்து அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மக்களுக்கு இலவச கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கு  300 கோடி வெள்ளி செலவு பிடிக்கும் எனவும் அவர் கூறினார்.


Pengarang :