NATIONAL

கோவிட்-19 எண்ணிக்கை குறைவதற்கு நான்கு வாரங்கள் பிடிக்கும்- நோர் ஹிஷாம் தகவல்

\’புத்ரா ஜெயா, ஜன 14- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை குறைய குறைந்தது நான்கு வாரங்கள் பிடிக்கும் என சுகாதார அமைச்சு கருதுகிறது.

பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நான்காவது வாரத்தில் அந்த நோய்த் தொற்று கண்டவர்களின் தினசரி எண்ணிக்கை 500 முதல் 1000 வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ  டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நேற்று தொடங்கி இம்மாதம் 26ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த இரு வார காலத்தில் கிடைக்கக்கூடிய கோவிட்-19 நோய்த் தொற்று தரவுகளின் அடிப்படையில் தமது தரப்பு ஆய்வுகள் மேற்கொள்ளும் என்றார்.

இந்த இருவார காலத்தில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என நான் கருதவில்லை. மாறாக, நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதை தடுக்க முடியும் என்றார் அவர்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு வந்தவுடன் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படும் என்றும் மே அல்லது ஜூன் மாதவாக்கில் நோய்த் தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தியதன் மூலம் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துதற்குரிய சரியான தடத்தில் நாடு பயணிக்கத்  தொடங்கியுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அரசாங்கம் அமல்படுத்தாமல் போயிருந்தால் வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதிவாக்கில் 5,000 கோவிட்-19 சம்பவங்களையும் மே மாத இறுதியில் 8,000 சம்பவங்களையும் நாடு பதிவு செய்திருக்கும். நடப்பு கோவிட்-19 பரவல் நிலவரங்களின் அடிப்படையில் சுகாதார அமைச்சு செய்திருந்த கணிப்பு இதுவாகும் என்றார் அவர்.

இந்த நோய்த் தொற்றின் தொடர்பை துண்டிப்பதற்கு ஏதுவாக நாம் இன்னும் கடுமையான அணுகுமுறைகளைக் கடைபிடிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :