NATIONALSELANGOR

சிலாங்கூர் மாநிலத்துடன் தொடர்புடைய வரலாற்றுக் கட்டிடங்களை பராமரிப்பீர்- சிலாங்கூர் சுல்தான் வேண்டுகோள்

ஷா ஆலம், பிப் 1– கோலாலம்பூரில் உள்ள வரலாற்றுப்பூர்வ கட்டிடங்களை குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்துடன் தொடர்புடையவற்றை முறையாக பராமரிப்பதோடு சீரமைப்பும் செய்யும்படி அதிகாரத் தரப்பினரை சிலாங்கூர் சுல்தான் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்தகைய கட்டிடங்கள் உயரிய வரலாற்று மதிப்பைக் கொண்டுள்ளதோடு சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் இடமாகவும் விளங்குகிறது என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.

தலைநகரில் உள்ள சுல்தான் அப்துல் சமாட் கட்டிடத்தை உதாரணம் காட்டிய அவர், 1897ஆம் ஆண்டு திறக்கப்பட்ட அக்கட்டிடம், கோலாலம்பூர் சிலாங்கூரின் தலைநகராக இருந்த 1974ஆம் ஆண்டு வரையிலான  காலக்கட்டத்தில் மாநில அரசின் நிர்வாக மையமாகவும் இருந்ததாகச் சொன்னார்.

கடந்த 1968ஆம் ஆண்டில் சுல்தான் ஷராபுடின் அக்கட்டிடத்தில்தான் சிலாங்கூர் மாநில அரசு அதிகாரியாக  பணி புரிந்தார் என்று அரண்மனை குறிப்பு கூறுகிறது.

இத்தகைய கட்டிடங்களையும் நினைவுச் சின்னங்களையும் முறையாக பராமரிக்காவிட்டால் காப்பாற்ற முடியாத அளவுக்கு அவை காலப்போக்கில் பழுதடைந்தும் இடிந்தும் போகக்கூடிய அபாயம் உள்ளது என்று சுல்தான் குறிப்பிட்டார்.

இதுபோன்ற சூழல் ஏற்படும் பட்சத்தில் அக்கட்டிடங்களை மறுசீரமைப்புச் செய்வதற்கு அதிக செலவு பிடிக்கும் என்பதோடு நாட்டிற்கு இழப்பும் ஏற்படும் என்று இன்று அனுசரிக்கப்படும் கூட்டரசு பிரதேச தினத்தை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் அவர் கூறினார்.

கோலாலம்பூரில் அமைந்துள்ள கார்க்கோசா ஸ்ரீ நெகாரா, மஸ்ஜிட் ஜாமேக், சுல்தான் அப்துல் சமாட் கட்டிடம், சென்ட். மேரி தேவாலயம், கோலாலம்பூர் ரயில் நிலையம், கே.டி.எம். தலைமையகம், பழைய இஸ்தானா நெகாரா, மெர்டேக்கா அரங்கம் போன்ற கட்டிடங்கள் சிலாங்கூர் மாநிலத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளதோடு நாட்டின் உருவாக்கம் தொடர்பான வரலாற்றுப் பதிவுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்றார் அவர்.

மௌரிய மற்றும் மொகலாய வடிவமைப்பைக் கொண்ட இந்த வரலாற்றுப்பூர்வ கட்டிடங்கள் ஒவ்வொன்றும் தனித் தனி வரலாற்று பதிவுகளைக் கொண்டுள்ளன. வருங்காலத் தலைமுறையினர் அதன் பெருமைகளை போற்றுவதற்கும்  பெருமிதம் கொள்வதற்கும் ஏதுவாக அவை பாதுகாக்கப்படுவது அவசியம் என்று சுல்தான் வலியுறுத்தினார்.


Pengarang :