NATIONALPENDIDIKANSELANGOR

யுனிசெல் இணைய வழி கல்வித் திட்டத்தில் 10,000 மாணவர்கள் பங்கேற்பு

ஷா ஆலம்,பிப் 2:- யுனிசெல் எனப்படும் சிலாங்கூர் பல்கலைக்கழகத்தினால் கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இயங்கலை பள்ளித் திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள சுமார் பத்தாயிரம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

2020ஆம் ஆண்டிற்கான எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம் தேர்வுகளை எழுதும் மாணவர்களை இலக்காக கொண்டு இந்த இணைய வழி கல்வித் திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் மேம்பாடு மற்றும் சமூக ஒருங்கமைப்புத் துறைத் தலைவர் அமிடி அப்துல் மானான் கூறினார்.

அவ்விரு தேர்வுகளை எழுதும் மாணவர்களைத் தயார் படுத்தும் விதமாக வகுப்புகளும் பயிற்சிப் பட்டறைகளும் இத்திட்டத்தின் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அதோடு மட்டுமின்றி கேள்விகளுக்கு பதிலளிக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கப்படுவதோடு  குறிப்பிட்ட பாடங்களுக்கு சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இத்திட்டத்தில் இளம் தலைமுறையினரின் மேம்பாட்டிற்கு முக்கியமான ஆற்றல், தனிமனிதப் பண்பு மற்றும் கல்வி ஆகிய மூன்று அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றார் அவர்.

இந்த கல்வித் திட்டத்தில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் uvs.unisel.edu.my  என்ற அகப்பக்கம் வாயிலாக பதிவு செய்யலாம் என்று அவர் ஆலோசனை கூறினார்.

 

 


Pengarang :