NATIONAL

பி.கே.பி. விதிமுறைகளை மீறுவோர் மீது  பிப். 4ஆம் தேதி முதல் கடும் நடவடிக்கை

கோலாலம்பூர், பிப் 2– நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறுவோர் மீது இம்மாதம் 4ஆம் தேதிக்குப் பின்னர் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் எச்சரித்துள்ளார்.

நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இவ்விவகாரத்தில் இனியும் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது என்று அவர் சொன்னார்.

நாட்டில் குறிப்பாக தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பகுதிகள் சம்பந்தப்பட்ட கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.

நாட்டில் கோவிட்-19 சம்பவங்கள் அபரிமிதமாக உயர்வு காண்பதற்கு கட்டுமானம் மற்றும் தொழிற்சாலைகள் முக்கிய காரணமாக விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சீரான செயலாக்க நடைமுறைகளை பின்பற்றுவது மற்றும் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுப்பது போன்ற காரணங்களால் காலைச் சந்தை தொற்று மையம் மற்றும் சாலையோர அங்காடி வியாபார தொற்று மையம் தோன்றவில்லை என்றார் அவர்.

தங்களிடம் வேலை செய்யும் அனைத்து அந்நியத் தொழிலாளர்களுக்கும் இன்று தொடங்கி கோவிட்-19 சோதனையை மேற்கொள்ளும்படி அவ்விரு துறைகளையும் சேர்ந்த முதலாளிகள் பணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கு முன்னர், ஆறு மாநிலங்களைச் சேர்ந்த அந்நியத் தொழிலாளர்களுக்கு மட்டுமே கட்டாய கோவிட்-19 சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

அந்நியத் தொழிலாளர்களால் உள்நாட்டினருக்கும் கோவிட்-19 நோய்த் தொற்று பரவும்  சாத்தியம் உள்ளதால் அவர்களின் உடலாரோக்கியத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

நோய்த் தொற்று அதிகரிப்புக்கு அந்நியத் தொழிலாளர்களுக்கான குடியிருப்பும் முக்கிய காரணமாக உள்ளதால இவ்விவகாரம் தொடர்பில் அவசர காலச் சட்டம் திருத்தப்படவுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

 

 

 


Pengarang :